சினிமாக் காதலி - ரகு
விடியற்காலையின் பின் பொழுதில் தொடங்கி
வரிசையாகப் பல மணித்துளிகளைக் கொன்றுவிட்டு
இடையில் இரண்டு சாப்பாட்டுப் பொழுதுகளைப்
பிச்சைக்காரன் தட்டில் சில்லறை போடுவதுபோல்
போட்டுப்போனது என் அலுவலகப் பணி
உடல்பூராவும் சோர்வுச் சகதியும்
உளமெங்கும் குழப்பக் குப்பையும் சேர
ஒருவழியாய்க் கட்டிலில் கிடத்தினேன்
என்னை ...இரவு
அரைதூக்கத்தில் எழுந்த - என்
அன்புக் குழந்தை "அப்பா" என்று
இறுக அணைத்துக்கொண்டது
அந்த ஸ்பரிசத்தில் - ஒரு
அர்த்தராத்திரிக் கடற்கரையின்
அமைதி நிலவியது என்னுள்
இறுதிக்காட்சி சினிமாக் காதலியாய்
ஓடிவந்து முத்தமழை பொழிந்தது
உறக்கம் ....!