என்ன சொல்லி விழுகிறது மழை துளி

மேகம் இடித்து மின்னல் அடித்து
வேகம் எடுத்தது மழைத்துளி
கதீரை உடைத்து எழாய் பகுத்து
வில்லோவியம் வரைந்தது மழைத்துளி

நிறமும் இன்றி வடிவம் இன்றி
உருவம் கொண்டது மழைத்துளி
தாய்பால் போலே தூய உருவம்
கொண்டு வந்தது மழைத்துளி

வைரம் போலே இலையின் மேலே
உருண்டு ஓடுது மழைத்துளி
முத்து போலே கீழே தெறித்து
உயிர் வித்தாகிறது மழைத்துளி

துளிகள் கோர்த்து அணிகள் சேர்த்து
உளிகள் செய்கிறது மழைத்துளி
அவ்வுளிகள் கொண்டு துளியாய் செதுக்கி
வழியை செதுக்குது மழைத்துளி

விதைக்கு உள்ளே வேரை மெல்ல
தட்டி எழுப்புது மழைத்துளி
சதைக்கு உள்ளே உயிர் சாறாக
வந்து சேருது மழைத்துளி

கழனியில் சேறாக கலந்து உயிர்
அன்னம் அளித்தது மழைத்துளி
குவளையில் நீராக நிறைந்தது பசி
தாகம் அழித்தது மழைத்துளி

திணைகள் எல்லாம் மக்கள் செழிக்க
தன்னை அளிக்குது மழைத்துளி
துணைகள் கொண்டு அலைகள் சேர
அணை தாண்டுது மழைத்துளி

கதீரால் உடைந்து கடலை கடந்து
மேகம் ஏறுது மழைத்துளி
காகம் போலே கருமை நிறம்
கொண்டு குளிருது மழைத்துளி

வெயிலை மறைத்து மயில்தோகை விரித்து
கீழே விழும் மழைத்துளி
நான் விழுவது வீழ்ச்சியல்ல என்று
சொல்லி விழுகிறது மழைத்துளி

எழுதியவர் : தமிழ் (16-Oct-14, 9:26 pm)
பார்வை : 137

மேலே