எவரிடத்து இப்படி மொழிய

மரகதங்கள் கிளர்ந்தெழுந்து
மகரந்தங்களாகி
விட்டிருந்த ஒரு
அடங்கா நாழிகையில்
புரவிகளின் கழுத்துக் கூந்தல்
வருடல்களாய்
எனக்குள் நிறைந்திருந்தன
உன் வாசங்கள்....!!
நீராடிக் கழிந்திருந்த
மஞ்சள் ஒளித்தேகமதில்
நீர்த் திவலைகளாய்
பூத்திருந்த உன்
ஞாபகங்களுக்கு...
சிலிர்த்துக் கொண்டே
துள்ளியெழுகிறது மயிர்க்கால்கள்...!!
யாருமற்றிருந்த ஓர்
அடர் வனாந்திரங்களில்
எனக்கான
ஞாயிறுக் கற்றையாய்
பச்சைப்பந்தல்
மாயைகள் கிழித்தெறிந்து
புகுந்திருக்கும் .. நீ
தூவிப் போயிருக்கும் எதுவானதாகவோ...
இப்படியாகக் குழம்பி
உறைந்திருந்த என்னை
அதிர்வித்தெழுப்பி
" பிடித்திருக்கிறது "
எனச் சொல்லி நகர்ந்திருந்த
நிமிடங்களில் ....
நான்.... இன்னும்
மொழியாமலேயே
முழுமையடைந்திருந்தது
நம்.... காதல்...!!