பொதுச்சின்னம்
பொதுச்சின்னம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
நெற்றியிலே நீறணிந்து
நினைவெல்லாம் சிவனென்ற
பற்றுடனே சைவரென்று
பக்தியுடன் திகழ்பவரே !
திருநாமம் நுதல்வைத்துத்
திருமாலின் புகழ்பாடிப்
பெருமைமயுடன் வைணவரென்று
பேசிதினம் தொழுபவரே !
கழுத்தினிலே சிலுவையுடன்
கர்த்தரிடம் மண்டியிட்டுக்
கிறித்துவராய் மேய்ப்பானின்
கிருபைக்காய் செபிப்பவரே !
குல்லாவைத் தலையணிந்து
குனிந்துதினம் ஐந்துமுறை
அல்லாவைத் தொழுமிசுலாம்
அன்பரென நிற்பவரே !
மதங்களெல்லாம் காட்டுகின்ற
மகத்தான ஒருசின்னம்
அகந்தன்னில் அணியாமல்
அவலத்தை விதைக்கின்றோம் !
அன்பென்னும் பொதுச்சின்னம்
அகமேந்தி மாந்தநேயப்
பண்புடைய மனிதனானால்
பகையின்றி வாழ்வோமே !
********