தாயே தமிழே வாழ்க

தாயே தமிழே வாழ்க!



வருக வாழ்க வாழும் தமிழ் தாயே!

பெருக நீள்க பேரும் புகழ் நீயே!

தருக தருக நாளும் ஆட்சி தாயே!

பெறுக பெறுக மேரும் மாட்சி நீயே!



அம்மா எனும் சொல் உதிர்த்தால்

அன்பு எனும் நெல் சிதறும்.

அம்மா என உனை நினைத்தால்

அநியாயம் தான் பதறும்?



தாயே எனும் தமிழ் பகிர்ந்தால்

தர்மம் தானே தலை வணங்கும்.

தாயே என உனை நினைந்தால்

தைரியம்தான் தான் பெருகும்.



அன்னை என வாய் மலர்ந்தால்

மென்மை தானே உள் வளரும்.

அன்னை என உனை அழைத்தால்

மண்ணதிர்ந்து வினை தளரும்.



மாதா என மடி கிடந்தால்

மனம் மகிழ்ந்து குணம் குளிரும்.

மாதா என உனைத் தொழுதால்

சோதனைகள் விலகி ஓடும்.



பெற்ற அவள் முகம் பார்த்தால்

பிள்ளை உற்ற பிணி தீரும்.

நற்றமிழே உனைக் கற்றால்

நல்லதெல்லாம் எமைச் சேரும்.



கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (19-Oct-14, 11:00 am)
பார்வை : 250

மேலே