மலேசியப் புதுக்கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும் --திருமதி இராஜம் இராஜேந்திரன் - பாகம் 1

மலேசியாவில் புதுக்கவிதைத் தோற்றம்


மலேசியாவில் புதுக்கவிதை தோன்றுவதற்கு
பல காரணங்கள் பின்புலமாக அமைந்துள்ளன. அவை இங்கே விளக்கப்பட்டுகின்றன.

1.1 தமிழ்நாட்டு இலக்கியத் தாக்கம்

பெரும்பாலும் மலேசியத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டு இலக்கியப் போக்கினை அடிப்படையாகக் கொண்டு, உள்நாட்டுப் போக்கிற்கேற்ப வடிவு கொண்டு வளரும் ஒரு துறையாகும். எனவே, தமிழ்நாட்டில் அறுபதுகளில் புதுக்கவிதை சுறுசுறுப்புடன் வளர ஆரம்பித்த போது, அந்தத் தாக்கம் நம் நாட்டிலும் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் புதுக்கவிதை 30களில் தோன்றி, 15 ஆண்டுகள் நிலவி, அதன்பின் சுமார் 15 ஆண்டுகள் தொய்வு கண்டு, 60களுக்குப் பின்தான் தொடர்ந்து வளர ஆரம்பித்தது. தமிழகத்தில் எழுத்துஒகால புதுக்கவிதையாளர்களான சி.சு. செல்லப்பா, சி. மணி, பசுவையா, தருமு ஔரூப் சிவராம், தி.சோ. வேணுகோபாலன், வைத்தீஸ்வரன், ஞானக்கூத்தன் போன்றவர்களின் புதுக்கவிதைகள், நம் நாட்டு கவிஞர்களுக்கு புதுக்கவிதையின் மேல் ஆர்வம் மேலோங்க காரணமாக அமைந்தன. எனினும் புதுக்கவிதையின் மேல் நாட்டம் இருந்தாலும் அவற்றைப் படிப்பதோடு நிறுத்திக் கொண்டவர்கள் சிலர்; படிக்காமல் முகம் சுளித்தவர்கள் பலர். ஒரு நீண்ட பாரம்பரிய இலக்கண மரபுடைய தமிழுக்கு, குறிப்பாகக் கவிதைக்கு இப்படியொரு வடிவத்தை மரபுக் கவிஞர்கள் ஏற்கத் தயாராக இல்லை. மரபை மீறும் துணிச்சலும் மலேசிய கவிஞர்களுக்கு இல்லை. ஆனாலும் எல்லாவித எதிர்ப்புகளையும் உடைத்தெறிந்து விட்டு துணிச்சலாகப் புதுக்கவிதை எழுதி, மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்திற்குப் பிள்ளையார் சுழிபோட்ட பெருமைக்குரியவர் சி. கமலநாதன் அவர்கள். 1964இல் இவர் எழுதிய "கள்ளபார்டுகள்" எனும் புதுக்கவிதையே மலேசியாவின் முதல் புதுக்கவிதை என போற்றப்படுகிறது. அக்கவிதையின் சில வரிகள்:

"மதியின்றிப் பிதற்றுவதும் - இங்கு
உள்ளவரை தின்று, ஊதிப் பெருப்ப தல்லால்
உருப்படியாய் செய்வதென்ன?"


1.2 பிறமொழி இலக்கியத் தாக்கம்

இந்தோனேசிய (மலாய்) இலக்கியத்தில் புதுக்கவிதை 1920களிலேயே தோன்றிவிட்டது. அங்காத்தான் 45ஒ (ANGKATAN 45) மிகுந்த பிரசித்திப்பெற்ற இலக்கிய இயக்கமானது. இவ்வியக்கம் புதுக்கவிதை(PUISI MODEN) துறைக்குத் தனித்துவமும் உத்வேகமும் அளித்தது. அதே காலகட்டத்தில் சிங்கை, மலாயா, மலாய் இயக்கத்திலும் புதுக்கவிதைத் தோன்றி, மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கி இருந்தது. மரபுக் கவிதை மேற்கத்திய பாதிப்பற்றது. புதுக்கவிதை மேற்கத்திய பாதிப்புடையது என்ற தெளிந்த இலக்கியச் சிந்தனையோடு, மலாய் இலக்கிய வாதிகளும் மலாய் எழுத்தாளர்களும் புதுக்கவிதையை மலாய் இலக்கியத்தின் புது வரவாக ஏற்றுக் கொண்டனர்.

1960களில் மலாய் இலக்கியத்தின் புதுக்கவிதைத் துறை மிகுந்த வளர்ச்சியை நோக்கி பீடுநடை பயின்றது. மலாய் இலக்கியப் புதுக்கவிதைத் துறையில் ஏற்பட்ட முயற்சிகளும் வளர்ச்சிகளும் கூட தமி௞ல் புதுக்கவிதைப் படைக்கும் பாதிப்பை சி. கமலநாதன் அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கலாம். மலாய் புதுக்கவிதைகள் மலாய் சமூகத்தினரிடையே ஏற்படுத்திய வி௞ப்புணர்வு சமுதாயப் பற்றுள்ள கவிஞர் சி. கமலநாதன் அவர்களை தன் இனத்திற்கு ஏற்ற புதுக்கவிதைகளைப் புனைய உந்துசக்தியாக அமைந்தது எனலாம்.


சமுதாய அரசியல் பின்னணி

நாடு சுதந்திரம் அடைந்து விட்டது. சுதந்திரத்தின் துணையோடு வளமான வாழ்க்கையை ஆர்வத்துடனும் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கும் வேளையில், ஏக்கமும் ஏமாற்றமுமே எஞ்சி நின்றன. உண்மைக்கும், உழைப்புக்கும், நேர்மைக்கும் இங்கு நியாயமான ஊதியமும் உரிமைகளும் வழங்க மறுக்கப்பட்டன. வாழும் சுதந்திரம் வந்துவிட்டது என்று தலைநிமிர முயலும் நடுத்தர வர்க்கம், குறுக்குவ௞யில் செல்பவர்களுக்கும் சிறப்பு உரிமையையும் சலுகையையும் பெற்று சுகமாக வாழும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் வாழ்க்கை வசமாகி கொண்டிருப்பதைக் கண்டு உள்ளம் குமுறியது.


நடுத்தர வர்க்கத்தின் அவலத்தையும் அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் களைய வேண்டுமென்கின்ற முனைப்புடன் கூடிய தார்மீகக் கோபத்தின் விளைவாக வடிவங்களின் மரபுகளின் மீறல்களாகப் புதுக்கவிதை கருவியாகப் புறப்பட்டிருக்கிறது. 1964-இல் சி. கமலநாதனின் "கள்ளப்பார்டுகள்" என்னும் புதுக்கவிதை இதற்குச் சான்றாக அமைகின்றது.


தன்னைச் சார்ந்த வர்க்கத்தினர் அனுபவிக்கும் இடர்பாடுகள், அல்லல்கள், விரக்தி, மனமுறிவு போன்றவற்றை உள்வாங்கி, உணர்விலேற்றி, கவிதையாக வடித்துள்ளார் இவர். இவரது கவிதைகளில் பொருளியல் அவலம், போலிபக்தி, பொதுத் தொண்டில் பொய்மை, அரசியல் பொய்மை, அரசியல் கயமை, மக்களின் அறியாமை, கலையில் கசடு போன்றவை பாடுபொருளாக அமைந்துள்ளதைக் காண முடிகின்றது.


1.4 பத்திரிகைகளின் பங்கு


மலேசிய இலக்கியத்துறைகளான கவிதை, சிறுகதை, புதினம் ஆகிய துறைகளை ஆதரித்து வளர்த்த பெருமை தமிழ்ப் பத்திரிகைகளுக்கு உண்டு. மலேசியாவில் தமிழில் முதல் புதுக்கவிதை தோன்றிய ஆண்டிலிருந்து கணக்கிட்டால், மலேசியாவின் தமிழ்ப் புதுக்கவிதை 1964இல் தமிழ் முரசு பத்திரிகையில் வெளியானது தெரியவருகிறது. புதுக்கவிதைத் துறையைத் தொடக்கி வைத்தப் பெருமை தமிழ் முரசு பத்திரிகையையே சாரும். எனினும் இப்புதுக்கவிதைத் துறை 1970களின் பிற்பகுதியில்தான் மறுபடியும் துளிர்விட்டு உண்மையான வளர்ச்சியின் வாசலை வந்தடைந்தது.


தமிழகத்தில் எழுத்து, கணையாழி சூறாவளி, கலைமகள், கலாமோகினி, கிராம ஊ௞யன், கசடதபற, ஞானரதம், நீலக்குயில், பிரக்ஞை, தீபம் போன்ற ஏடுகள் புதுக்கவிதைக்குத் தளம் அமைத்துக் கொடுத்தன. அதுபோல நம் நாட்டில் தமிழ் முரசு, தமிழ்முரசு, தமிழ் மலர், வானம்பாடி, உதயம் போன்ற ஏடுகள் புதுக்கவிதைக்குத் தளம் அமைத்து கொடுத்து, புதுக்கவிதை இலக்கியப் பயிர் செ௞த்து வளர வ௞வகுத்தன.


1.5 புதுமை காண விழையும் போக்கு

பொதுவாக, வாழ்க்கையில் மாற்றமும், புதுமையும் ஏற்படும்போது எல்லா நிலைகளிலுமே புதுமை காண விழைவது இயல்பு. மிதமிஞ்சிய கட்டுபாடுகளும் வரையறைகளும் நம்மை அதிகமாகவே கட்டிப்போட்டு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருக்கின்றன என்னும் உணர்வு ஏற்படும் போது, கட்டுப்பாட்டையும் மீறும் வேகம் உண்டாவது இயல்பே. இக்கூற்றை ஆதரித்து இரா. தண்டாயுதம் -

"இலக்கண வேலி
சிலர் கையில் சிறையாய்
உருவெடுத்து வந்தவுடன்
பிறந்திட்ட புதுக்குரல்
புதுக்கவிதை"


என்கிறார்.


எனவே, மலேசியாவில் புதுக்கவிதை தோன்றியது ஓர் இயல்பான வளர்ச்சி நிலையே என்று கூறலாம்.

2. மலேசியத் தமிழ்ப் புதுக்கவிதை வளர்ச்சி - படிநிலைகள்


i. தொடக்கக் காலம் (வானம்பாடிக்கு முந்திய காலம் 1964- 1976)

ii. வானம்பாடி காலம் (1977 - 1987)

iii. வானம்பாடிக்குப் பிந்திய காலம் (1988 - 1998)

iv. மறுமலர்ச்சி காலம் (1999 முதல் இன்று வரை)


தொடரும் .......................

எழுதியவர் : --திருமதி இராஜம் இராஜேந்தி (20-Oct-14, 4:24 pm)
பார்வை : 475

மேலே