இலண்டன் பெருநகரப் பேருந்து - நேரிசை வெண்பாக்கள்

இலண்டன் பெருநகரப் பேருந்தெல் லாமே
இலகுவாய் ஓட்டியே செல்ல - பலப்பல
உண்டிங்கே! ஓட்டுனரில் உண்டு பலநாட்டுப்
பெண்கள்! ஒருவரைக்காண் இங்கு! 1
இலண்டன் பெருநகரப் பேருந்தெல் லாமே
இலகுவாய் ஓட்டியே செல்ல - பலநாட்டு
ஓட்டுனராய் சீக்கியரும் இந்தியரும் தம்திறமை
காட்டுகின் றார்மிகவே இங்கு! 2
பெருநகரப் பேருந்தெல் லாமே எளிதாய்
நெருக்கமான வீதிகளில் ஓடி - பெருமையுடன்
செல்ல எழில்மிகுந்த ரெட்டைத் தளபேருந்
தில்செல்ல இன்பமே இன்று! 3
எழில்மிகு பேருந்தில் செல்ல பெருமை,
மழலைபோல் இன்பம் மிகுமே - எழுச்சி
தராதுதான் பேருந்தின் கட்டணம்; செல்ல
வராதே விருப்பாய் மனம்! 4
எழில்மிகு ரெட்டைத் தளபேருந் தில்செல்
மழலைபோல் இன்பம் மிகுமே - எழுச்சி
தராதுதான் பேருந்தின் கட்டணம்; செல்ல
வராதே விருப்பாய் மனம்! 5
எங்குயேறி னாலும் இறங்கினாலும் பேருந்தில்
இங்கு பயணச் செலவுமிக - எங்குமே
என்றுமே ஒன்றரைப் பௌண்டுகள்; எம்கணக்கில்
இன்றுநூற் றைம்பதுரூ பாய்! 6
நகரப் பேருந்துகள் - city bus