மன ஊஞ்சல்-----அஹமது அலி-----

வானோக்கி எய்திட
பூமி பார்த்தே பாய்கிறது
ஈர்ப்பு விசையினின்றும்
விடுபடாமல் விளையாடுகிறது..!
0
0
வெற்றிடத்தில் புகலிடம்
புக முடியாமல்
வெட்ட வெளியில்
அலைகிறது.!
0
0
தத்தியோடி
தாவியோடி
பறந்தோடிப் பார்த்தும்
பலனில்லை பாவம்..!
0
0
சில போதுகளில்
திரிசங்கு சொர்க்க நிலை

சில போதுகளில்
பூலோக சொர்க்க நிலை..!
0
0
ஓரிரு நாட்களில்
உலகாண்டு
உல்லாசம் காண்கிறது

பிரிதொரு நாட்களில்
துறவு பூணுகிறது..!
0
0
நினைவகத்திலும் அடங்காமல்
விண்ணகமும்
மண்ணகமும்
கண்ணக கனாக்களுக்கு அப்பாலும்
எம்பிக் குதிக்கிறது..!
0
0
ரகசிய உலாக்களில்
ஊர்வலம் நடத்தி விட்டு
உள்ளுக்குள் அம்பலப்படுத்தி
அறிவிப்பு செய்கிறது...!
0
0
காயங்கள் இல்லா
வலியை அறிமுகம் செய்து
சந்தர்பத்திற்கேற்ப
சாயங்களை பூசிக் கொள்கிறது..!
0
0
இருப்பிடம் சொல்லாமல்
இருக்குமிடமெல்லாம் அலைபாய்ந்து
இறுதிவரை ஊசலாடி
இன்ப துன்பம் சுகிக்கிறது!

எழுதியவர் : அஹமது அலி (24-Oct-14, 8:53 am)
பார்வை : 234

மேலே