முகிலின் முகத்தில் முத்தமிட்ட இதழாய் நீ - இராஜ்குமார்
முகிலின் முகத்தில் முத்தமிட்ட இதழாய் நீ
=========================================
புயலோடுப் பறந்த
கிளையின் நுனியில்
உடைந்த கூட்டையேந்தி
பறக்கும் சிறுபறவையாய் நீ ...!
வேதனை மறந்த
வெண்ணிற பறவையின்
அலகில் அழுத்தமாய்
அலையும் புதுஆவலாய் நீ ..!
மைனாவின் தேகத்தில்
மைத் தெளித்து
எழுதிய எழுத்தில்
ஏக்கத்தின் உளறலாய் நீ ..!
கண்ணாடியின் கன்னத்தில்
மோதி முறைக்கும்
மழைத்துளியின் மனதை
இரசிக்கும் குழந்தையாய் நீ ..!
இளவேனிற் பொழுதில்
இளமனதை இழுத்து
இடைவிடா கிறக்கத்தில்
சொட்டும் தேன்துளியாய் நீ ..!
மஞ்சள் நிறத்தை
வெட்கமாய் தைத்த
அழகிய ஆடையில்
நுழைந்த நுனிநூலாய் நீ ..!
பாதம் குளிரும்
ஈரமான நதியோரம்
சிதறாமல் குவித்த
குறுநகை குவியலாய் நீ ...!
வானத்தை வரைந்து
முகவரி தொலைத்த
முகிலின் முகத்தில்
முத்தமிட்ட இதழாய் நீ ..!
- இராஜ்குமார்

