கேட்க நினைக்கும் சில கேள்விகள்

அமைதியில்லாத உலகத்திலே
--------ஆண்டவனே என்னை ஏன்படைத்தாய் ?
இமைகளைத் திறந்தால் வடிகின்ற
--------கண்ணீரை எனக்குள் ஏன்அடைத்தாய் ?

ஒருசாண் வயிற்றில் பசியெடுத்தால்
--------ஒருபிடி உணவு யார்கொடுப்பது ?
வருமுன் காப்பது நன்மையெனில்
--------மரணத்தை எப்படி நான்தடுப்பது ?

படைத்தது எல்லாம் அழியுமெனில்
--------கடைசியில் இங்கு எதுநிலைக்கும் ?
படைத்தது எல்லாம் இருக்குமெனில்
--------பூமியில் புதிதாய் எதுமுளைக்கும் ?

உயிர்களின் சிறப்பு மனிதனெனில்
--------ஊமைகள் எப்படிப் பிறக்கிறது ?
பயின்றால் அறிவு வளருமெனில்
--------பைத்தியம் எப்படிப் பிடிக்கிறது ?

மனிதம் என்பது ஒன்றென்றால்
--------மதங்களை அதிலே யார்வைத்தது ?
இனிமை என்பது இயற்கையெனில்
--------எரிமலைக்குள்யார் தீவைத்தது ?

இறைவன் என்னும் ஒன்றுக்குள்
--------இத்தனைப் பிரிவுகள் யார்போட்டது ?
இறைவன் மட்டும் இல்லையெனில்
--------இந்த உலகினை யார்காப்பது ?

எழுதியவர் : ஜின்னா (24-Oct-14, 11:53 am)
பார்வை : 203

மேலே