மதிகொண்டு விதிவென்று மாலைசூடு
விதையொன்று செடியாகி விருச்சமாகும்
கதையதுபோல் நீவளர்வாய் நாளைதம்பி !
விதியென்று கிடப்போரை தூரப்போடு
மதிகொண்டு விதிவென்று மாலைசூடு !
உதவிகளை எதிர்பார்த்து உறங்கிடாதே
கதவுகளை அடைத்துவைப்பார் கலங்கிடாதே
மிதமான வாழ்க்கைஎன்று ஒன்றுமில்லை,
இரதமதுவும் நூலிழுக்க வருவதில்லை!
சிதையாமல் சிந்தனையை வலுவாயாக்கு
விதம்விதமாய் அறிவிருக்கு விரைந்துதேடு!
இதமான வாழ்க்கையது கடையிலில்லை
நிதம்நிதமும் தேடினாலும் கிடைப்பதில்லை
பதறாதே நீநினைத்தால் உருவாக்கலாம்
பதுமையையும் உன்னறிவால் உயிராக்கலாம்
எதுவேண்டாம் அதையெல்லாம் முடித்துவைப்பாய்
எதுவேண்டும் அதையும்நீ முடிவெடுப்பாய்
இதுபோதும் நெஞ்சுரத்தால் உலகைவெல்வாய்
கதிர்போல சுடர்பெறுவாய் வறுமைகொல்வாய்!