K S கலை- இலக்கிய உலகில் கம்பீர நடை
இன்று காலை ... சூடாய் ஒரு கப் காபி குடித்துக் கொண்டிருந்தேன் நானே போட்டு .( ஞாயிறுகளில் எஜமானி அம்மாவை தொந்தரவு செய்வதில்லை ) .என் காபியை குடிக்கவும் முடியாமல் , கொட்டவும் முடியாமல் ' "காதல் உற்றிலன் இகழ்ந்திலன்" ஆக ராமர் காட்டுக்கு போனது மாதிரி இருந்தபோது ...
சூடான ஒரு கவிதை பார்த்தேன் . காதல் உற்றேன்.
கவிதை -' சினிமாக்காரன்' . எழுதியவர் - கே-எஸ்-கலை
//திரை செய்து
மனம் கெட்டான்
நரை கண்டும்
குணம் கெட்டான்
தரை தவழும் பூ மீதும்
தப்பெண்ணம்
படர விட்டான் ! '//
- எவ்வளவு தீர்கமாக ஆரம்பிக்கிறது கவிதை .எளிய சொற்கள் . வலிமையான கருத்து .பார்ப்பவரை ஒரு நிமிஷம் யோசிக்கவைக்கும் , மண்டையில் சுரீர் என்று ஷாக் வைக்கும் இரு கம்பிகளாக தொடர்கிறது கவிதை எளிமையோடும் , வலிமையோடும் .
//ஹாலிவூடு
போல நாங்கள்
ஆக வேண்டும்
என்றுரைத்தான்
கோலிவூட்டை
காலி வீ டாய் ஆக்கிவிட்டு
காசு தின்று
ஏப்பம் விட்டான் ! //
ஹாலிவுட் படம் மாதிரி எடுக்கிறேன் என்று நம் கதைகளை / பிரச்சனைகளை பேசாமல் கோலிவுட்டை காலியாய் வைத்து விட்டனர் . ஆம் தோழரே .
சரி இவர் வேறு என்ன எழுதி இருக்கிறார் என்று பார்ப்போம் என அவரின் படைப்புகளை படிக்க ஆரம்பித்தேன் .
அடுத்தது -'இது தோட்டக்காட்டான் கதை"
//இறக்குமதி செய்யப்பட்ட
கொத்தடிமைகளின் உழைப்பில்
ஏற்றுமதி செலாவணி
செழிப்பாக இருப்பதும்,
மாற்றியுடுக்க துணியில்லா
தோட்டக்காட்டான் வாழ்க்கை
புளிப்பாக இருப்பதும்,
விதி எழுதும் கதையாக... // இப்படி ஆரம்பிக்கறது கவிதை .தோட்ட தொழிலாளிகளின் அவலங்களை உரத்து சொல்கிறது .
//தேர் வரும் போதும்
தேர்தல் வரும் போதும்
நலன்விரும்பிகள் – தம்
சுய நலன்விரும்பி வருவார்கள் !
ஆடல் பாடல் கூத்தோடு
அவியல் பொரியல் வறுவல் சேர்த்து
அன்னதானம் தருவார்கள் ! //
ஒரு ஏமாற்று நிகழ்வை எவ்வளவு எளிமையாக , சுற்றி வளைக்காமல் சொல்கிறார் கலை . நீங்கள் மீட்டலுக்காகத்தான் இக்கவிதை படைத்து இருக்கிறீர்கள் கலை .கீழுள்ள குறிப்பு உணர்த்துகிறது .
எங்களுக்கெல்லாம் இலங்கை பிரச்சனை என்றால்... போர் பற்றி ஒரு கவிதை ,தலைவரை பாராட்டி ஒன்று , முள்ளிவாய்கால் பற்றி ஒன்று , எதிரி பற்றி ஒன்று படைத்து விட்டால் போதும் . நாங்கள் தமிழின மீட்பர்கள் ஆகி விடுவோம் . எங்களில் பல பேருக்கு அங்கு என்ன நடக்கிறது ... உரிமைகள் பறித்து சலுகைகளை மட்டும் கொடுத்து .. வரலாறுகள் அழித்தும் , திரித்தும் நடந்து கொண்டிருப்பது பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை .
இலங்கை பிரச்சனை பற்றி எழுதுபவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் , நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொண்டு எழுதுங்கள் .அவர்கள் படைப்புகள் , வாழ்க்கை , சமுகம் எல்லாம் இணையத்தில் இருக்கிறது .படியுங்கள் ,(இல்லை எனில் ஒரு இலங்கை தமிழரிடம் பேசுங்கள் .).அதை படிக்காமல் நீங்கள் எழுதுவது அவர்களுக்கு ஒரு பலனையும் ஏற்படுத்தப் போவதில்லை .இதை கலையே தன் பாணியில் கடைசி வரிகளில் சொல்லிவிடுகிறார் .
//தோட்டக்காடு
எப்போதும் குளிர்ச்சியாகவே
இருக்கிறது- அதனால்
தோட்டக்காட்டான்களின்
வயிற்றிலும் நெஞ்சிலும்
எரியும் நெருப்பு
எவ்வளவு சூடென்பது –
யாருக்கும்
தெரியாமலேயே இருக்கிறது !//
..................................................................
அடுத்து 'கவிஞன்'
கவிஞனை பற்றி ஒரு கவிஞனே எழுதிகிறார் .
//பூமிக்கு இழுக்கென்றால்
பூகம்பம் இவனாவான்...!
நிலவுக்கு விளக்குவைத்து
நீங்காத ஒளிகொடுப்பான் !
புளுட்டோவில் வீடுகட்டி
புற்தரையில் புரண்டிருப்பான் !
ஓசோனின் ஓட்டைகளுக்கு
ஒத்தடங்கள் கொடுத்திருப்பான் !
====
பெருங்குடலும்
சிறுகுடலும்
வெறுங்குடலாய் கிடந்தாலும்
ஊர்ப்பசியை விரட்டிவிட
பெருங்கடலாய் கொந்தளிப்பான் ! //
கவிதை முழுவதையும் நான் படைக்க போவதில்லை .
கடைசி வரிகளில் நம்மை உலுக்குகிறார் .நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்கிறார் . சென்று கட்டாயம் படியுங்கள் .புரிந்து கொள்வீர்கள் .
கலையை உங்கள் அனைவரும் சார்பாகவும் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன் . பாராட்டுகிறேன்.
இலக்கிய உலகில் தவழும் குழந்தை என அவர் சுயவிவரம் சொல்கிறது . அவருக்கே குழந்தை பிறந்து இன்று கலை கம்பீர நடை போட்டுகொண்டு இருக்கிறார் .
வாழ்த்துக்கள் கலை .
தொடருங்கள் ...