என் வாழ்க்கை யார் கைகளில்

காலத்தால் ஆளப்படும்
நம் உலகம்
பிறரால் வாழப்படும்
என் வாழ்க்கை

எப்பொழுதேனும்
உன் வாழ்க்கையை
நீ வாழ்ந்திருக்கிறாயா?
யோசித்தேன் ...

இப்பொழுது என் வாழ்க்கை
யார் கைகளில்?

இருட்டுக் கருவறையில்
குருட்டு மனுசியாய்
நான் உதைத்தபோது
மருண்ட விழிகளும்
துவண்ட கால்களும்
தோளோடு அணைக்கப்பட்டு

அப்போது என் வாழ்க்கை
யார் கைகளில்?

உடைந்த பென்சிலை சீவிச்சீவி
பேனா பிடிக்க
எண்ணிய பருவம்
அம்மா களைந்த
சேலை கட்டி
குட்டிக் கூந்தலை
நீளமாய்ப் பின்னி
பெரிய மனுசியாய்
நடித்த காலம்

அப்போது என் வாழ்க்கை
யார் கைகளில்?

தாவணி அணிய
சொன்ன வயதில்
துப்பட்டா இல்லாத
குர்தா ஆசை

பக்கத்துவீட்டு அண்ணனுக்கும்
எதிர் வீட்டுத் தாத்தாவுக்கும்
என்னிடம் பேச
ஏகப்பட்ட விஷயங்கள்
எள் எனும் முன்
எண்ணெயாய் உதவிகள்
தொடுதலும் துலங்கலும்
புரிந்த நேரம்

அப்போது என் வாழ்க்கை
யார் கைகளில்?

தென்றலின் அசைவில்
படகில் பயணம்
கூட ஒரு துணை
கைத்தூக்கி காப்பாற்ற!

அடுக்களையில் சுவைமாறாச் சமையல்
அலுவலகத்தில் அலுப்புறாப் பணிகள்
இவையிடையே
என் இருட்டுக் கருவறையில்
ஒரு குருட்டு மனுசியின்
பயணம் முதலிலிருந்து
கூடவே சாட்சியாய் நானும்

அப்போது என் வாழ்க்கை
யார் கைகளில்?

நரை தட்டி மறையோதி
குறை வாழ்வை நிரப்பும் நேரம்
இலைமறை காய்களாய்
இனிய நினைவுகள்


அப்போது என் வாழ்க்கை
யார் கைகளில்?

நான் எனக்காக
வாழ்ந்த நொடிகள்
காலத்தால் சிறிதே எனினும்
மயங்கிய பொழுதுகள்
மங்காத நினைவுகள்
யோசித்தே பட்டியலிட்டேன்

இதோ...

கூண்டுக் கிளி வளர்த்து
கூடைப் பூப்பறித்து
ஆலமர ஊஞ்சலிட்டு
அணில் கடித்த காய் பறித்து
தூரத்தெரியும் சிறுமலையும்
துளிர்த்து நிற்கும் சிறுசெடியும்
துள்ளித்திரியும் மழலையரும்
பொக்கைவாய் முதியவரும்
அள்ளிப்பருகிய அழகுகள்

ஆறுதல் சொல்லும் கண் அசைவும்,
தோளோடு நீர் கொடுக்கும் உரிமையும்,
எப்பொழுதோ உதவிய முகம் மறந்தஉதவியும்
எப்பொழுதும் தித்திக்கும் முதல் முத்தமும்
யதார்த்த வாழ்வில் தொலைத்த காதல்
எட்டிப்பார்க்கும் தருணங்களும்
நான் வாழ்ந்த நொடிகள்

இப்பொழுது என் வாழ்க்கை
யார் கைகளில்?

எழுதியவர் : சிவகாமி அருணன் (26-Oct-14, 3:26 pm)
பார்வை : 153

மேலே