பொறுப்பான கலைவாணி
ஊருக்குள் வந்த மின்சாரம்
தெருவிலேயே நின்று
வெளிச்சம் தந்த காலம்,
விளக்கின் ஒளிகூட
கம்பத்தை காக்க உதவும்—பிறர்
வந்து மோதிவிடாமல்.
காரிருள் சூழ்ந்திருக்கும்
நட்ட நடு சாமம்
ஒரு சாண் வயிற்றுக்கு
ஊரையே வலம் வந்து
காத்தருளும் மதுரை வீரன்
நம்பிக்கையான நம்ம ஊர் கூர்க்கா.
ஊர் உறங்கும் வேளையிலே
அமைதியாய் பரீட்சைக்கு படிக்கக்
கூர்க்காவிடம் எழுப்ப சொல்லி
மாணவ நண்பர்கள் மூவர்
இரண்டு சிகரட்டைக்
கைமாறாய்க் கொடுக்க
சிகரட்டை பற்றவைத்து
முடியும்வரை பக்கத்திலிருந்து
படிக்கவைத்து ஊக்குவித்த
நல்ல மனிதர் கூர்க்கா—அவர்தான்
எங்களின் அறிவுக்கும், உயர்வுக்கும்
பொறுப்பான கலைவாணி.