அழுகையும் சிரிப்பும்
பிறந்ததும் நான் அழுதேன்..
என் மொழி இவர்களுக்கு
புரியவில்லையே என்று!
வளரும் போதும் அழுதேன்..
என் சுட்டித்தனத்தை
அமுக்கியதால் அன்று..!
வளர்ந்த பின்னும் அழுதேன்..
என் காதலை கேலி செய்து
சென்றவளைக் கண்டு!
மணம் புரிந்த பின் கூட அழுதேன்..
மனம் புரிதல்
சுலபம் இல்லை என்று!
மனிதனாக அழுகிறேன் என்றும்
மனிதத் தன்மையே
இல்லாதவரைக் கண்டு!
அவ்வப்போது சிரிக்கின்றேன்
தகவிலாதார் தக்கார் என
போற்றப் படுவது கண்டு!
எப்பொழுதும் சிரிக்கின்றேன்
என்னால் ஒரு ஜீவன்
நன்மை அடைவது கண்டு!
அழுவது நிறுத்தி சிரித்திடுவேன்
ஆண்டவன் என்னுள்ளே
நிரந்தரமாய் தங்கும் நாள் அன்று!