அன்போடு இருங்கள்- கவிதைப் போட்டி

வம்போடு வாழ்வோரே.- சுயநல
அம்போடுத் திரிவோரே.- எல்லா உயிரிடத்தில்
அன்போடு இருங்கள்.

அன்போடு வாழத்தானே - நம்மை
ஆண்டவன் தாயின் கருவில் விதைத்தான்.
தாயவள் தன்னையும் - தன் வயிற்றில்
தான் சுமக்கும் உயிரையும் - தான் துடித்தாலும்
துடிக்கும் காலமோடு வாழப் பயின்றாள்

அவளிடம் இருந்தல்லவா அழியாத
அன்பு பிறக்கின்றது. - அவள்
நிலாவைக்காட்டி,கிளியைக்காட்டி
நம்மை உலாவவிடுகின்றாள்

தீக்குச்சி முத்தமிட்டதும்
தீபம் எரிவதைப் போல் - மனிதா நீயும்
அன்போடு வாழ்ந்துப்பார்.- வாழ்க்கையில்
ஆனந்தம் சுடர்விட்டு எரியும்.

கரும்பை சுவைத்த நாக்கு இனிப்பதைப் போல்
கருணையினை சுமந்த மனிதன்
கடவுளுக்கு நிகராய் உயரப்படுகிறான்.

காந்தி என்ற புனிதன் மனிதன் தானே -அவர்
கொடுமைகளுக்கு எதிராக நடந்தாரா என்ன?
கருணையோடு ஏற்றதினால்தானே -எந்தக்
காலத்திலும் இன்னும் அவர் வாழ்கின்றார்.

தான்வாழப் பிறரைக் கெடுக்காதே
பிறர் வாழ தடைகளை விதைக்காதே.
இருப்பது சிலகாலம்.- அதில்
இருப்பதற்குள் ஏனிந்த அலங்கோலம்.

கருணைக் கடலில் நீந்தத்தெரியாதவன் -ஆழ்க்
கடலில் நீந்தி உயிர் பிழைத்தால் என்ன?
நீந்தல் என்பது எளிதல்ல - அன்போடு வாழ
நீந்தித் திரிவதும் எளிதல்ல.

வறியவரிடம் அன்பைக் காட்டு - அன்பின்
நெறியினில் வாழ்க்கையை ஓட்டு.
வாழும்போது தெரியாது உனது பெருமைகள்
வீழும்போது விலகாது உனது சிறுமைகள்.

உள்ளொன்று வைத்து புறமொன்றுப்பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் என்ற
உன்னத தத்துவம் நாம் வாழத்தானே
உணர்த்தியது.

நாவில் ஒன்று நினைவில் ஒன்று என்று
நடப்போரிடம் அன்பு வாழ்வதேது?-அவரை
நினைவில் கொண்டு நம்மை
நாமே திருத்திக்கொள்வதில் தாழ்வதேது.?


அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று
அங்குல வரியில் பதிந்தவைகள் -நம்
குலவிதிகளுக்குத் தானே விதித்தவைகள்.
வாழ்க்கைப் பயணம் சிறிது தூரம் என்றாலும்
விதிக்கப்பட்ட அன்பின் பயணம் நெடுந்தூரம்.

உயரப் பறக்கும் காற்றாடி - அது
உச்சி வானைத் தொட நூலிழைத்தானே
உயரவைத்தல் போல் - மனம் எனும்
காற்றாடி ஆசையெனும் வானில் உயர
கருணை எனும் அன்பு நூலிழைத்தானே
கட்டுப்பாட்டில் வாழ உணர்த்தும்.

அன்பு எனும் கட்டுப்பாட்டில் வாழ்ந்துபார்.
அகிலமே உன்னை உயரத்தில் வாழவைக்கும்.
அன்போடு இருங்கள். - நல்லப்
பண்போடு வாழுங்கள்

எழுதியவர் : ச. சந்திர மௌலி (1-Nov-14, 6:36 am)
பார்வை : 171

மேலே