இலைகள்
எத்தனைப் பெயர்கள் இலைகளுக்கே
பாவலர் கருமலைத்தமிழாழன்
முத்தமிழ்போல் இனித்திங்கே பெருமை சேர்க்கும்
முக்கனிகள் தருகின்ற மரங்கள் தம்மில்
முத்தமிடும் இலைகளைநாம் இலையே என்போம்
முப்போக நெற்பயிரின் இலையை நாமோ
தித்திக்கும் தமிழாலே தாள்கள் என்போம்
திண்மையினை உடல்சேர்த்து நோய்த டுக்கும்
சத்தான பால்கொடுக்கும் பசுக்கள் தின்னும்
அருகிலையைப் புல்லென்றே அழைக்கின் றோம்நாம் !
சப்பாத்தி தாழைமர இலையை நாமோ
சந்தமிகு தமிழாலே மடலே என்போம்
எப்போதும் பணிவதனால் புகழ்தா னென்றே
எடுத்துரைக்கும் நாணலொடு கரும்பின் இலையை
தப்பாது நாம்தோகை என்றே சொல்வோம்
தாள்களினால் நீருண்டு தலையால் நல்கும்
ஒப்பில்லா தென்னைமர இலையை நாமோ
ஓலையென்றே ஒண்டமிழில் செப்பு கின்றோம் !
உடுப்பதற்கே முன்னோர்கள் இலையைக் கொண்டார்
உண்கின்ற இலைக்கறியை கீரை என்போம்
அடுக்கடுக்காய்ப் பலசொற்கள் ஒருபொ ருட்கே
அருந்தமிழில் இருப்பதனை அறிந்தும் நாமோ
அடுத்தவரின் கால்வீழ்ந்தே அடிமை யாகி
ஆங்கிலந்தான் அறிவியலுக் கேற்ற தென்றே
தடுக்கின்றோம் தமிழ்க்கல்வி ! முயற்சி யின்றித்
தாய்த்தமிழைத் தாழ்த்தாமல் உயரச் செய்வோம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
