உரிமை பெறுதல் என்று
உரிமை பெறுதல் என்று
பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழாஉன் முன்னோர்கள் கடல்க டந்து
தம்மறத்தால் விரிவாக்கித் தந்த நாட்டைத்
தமிழாநீ மொழிவாரி மாநி லத்தால்
தடுக்காமல் பிறர்பறிக்க கொடுத்தே மாந்தாய் !
தமிழாஉன் முச்சங்க நூல்க ளெல்லாம்
தாம்பொங்கி எழுந்தகடல் கோள ழிக்கத்
தமிழாநீ இருந்தவற்றைக் காத்தி டாமல்
தலைமூழ்கி ஆற்றினிலே ஓட விட்டாய் !
தமிழாஉன் தமிழ்க்கல்வி தடுத்தே யன்று
தம்மொழியில் ஆரியர்கள் மாற்றி விட்டார்
தமிழாநீ ஆங்கிலத்தின் கால்கள் பற்றித்
தமிழ்க்கல்வி தனைநீயே அழித்தாய் இன்று ~
தமிழாஉன் அறிவுதனைப் புராணம் சொல்லித்
தற்குறியாய் மடமையிலே மழுங்கச் செய்தார்
தமிழாநீ மேல்நாட்டு மோகம் கொண்டு
தன்மானத் தமிழ்ப்பண்பை இழந்தாய் இன்று !
தமிழாஉன் ஒற்றுமையை மூவேந் தர்கள்
தன்னலத்தால் கூறுபோட்டுப் பிரித்தார் அன்று
தமிழாநீ கட்சிசாதி தோற்று வித்துத்
தலைவர்பின் தனித்தனியாய்ப் பிரிந்தாய் இன்று !
தமிழாஉன் சொத்துகளைப் புரோகி தரன்று
தம்வாக்குத் திறத்தாலே தமதாய்க் கொண்டார்
தமிழாநீ அந்நியர்க்கே நிலங்கள் விற்று
தலைகுனிந்தே அவர்கடிமை ஆனாய் இன்று !
தமிழாநீ ஆட்சிதனை அந்நி யர்தம்
தலைசூட்டிக் கைகூப்பி வணங்கி நின்றாய்
தமிழாநீ பதவிகளைப் பிறமா நிலத்தார்
தமக்களித்தே அவரின்பின் தாழ்ந்து நின்றாய் !
தமிழாநீ வீரத்தைத் தன்மா னத்தைத்
தற்குறியாய் ஆரியர்க்கே அடகு வைத்தாய்
தமிழாநீ உனையுணர்ந்தே விழிப்புற் றால்தான்
தலைநிமிர்ந்தே உன்னுரிமை பெறுவாய் இங்கே !