எச்சரிக்கிறேன்

இருள்படர்ந்த
இதயவனத்தில் - இன்று
இடிமின்னலோடு
அடைமழை

இயற்கை விரும்பிகளே!

கால்பதித்து விடாதீர்
எம் தேசத்தில்

இங்கு நத்தைகள் ஊராது
மழையின் விந்துக்கு
மண்ணின் கர்பத்தில்
காளான்கள் பிரசவிக்காது

இலை மெத்தைமீது
துளிக்குழந்தை இதமாய்
துயில் கொள்ளாது
அழுக்கு குளித்த ஆனந்தத்தில்
பட்சிகள்தன் சின்ன சிறகுலர்த்தாது

வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
உள்ளே வர எத்தணிக்காதீர்

என்
ம(யா)னமெங்கும்
உயிர்வேறு
உணர்வு வேறென
சமுதாயத்தின் கோரப்பற்கள்
கொய்தெரிந்த என் சடலங்கள்

ரத்த நாளம றுத்த
நம்பிக்கை வார்த்தைகளால்
சகதிகளாக தேங்கிக் கிடக்கிறதென்
செந்நீர்

கலா ரசிகர்களே!

கவிச்சோலை தானென்று
காற்றார எண்ணாதீர்
குருதிவாசம் - உம்
நாசி அழுகிடக்கூடும்

தேனென்று
மெத்தனமாய்
திராவகத்தை
பருக துடிக்காதீர் - அது
உமக்கு நல்லதல்ல

ஈனக்கழிவில் விளைந்த
பேராசை பிண்டங்களே
எனை பின்தொடராதீர்!

வறுமையின் பசிக்கு
இரையானாலும் - உம்
வாலிப ருசிக்கு இசைந்திடேன்

எச்சரிக்கிறேன்

நான் உண்மை
அது உமக்கு
ஒருபோதும் ஒவ்வாது

எழுதுகொலென்ற எக்களாத்தில்
எமை நெருங்கிவிடாதே
அதுவே உந்தன்
குரல்வளை அறுக்கக்கூடும்...!


(மீள் பதிவு - டைரி 2013)

எழுதியவர் : யாழ்மொழி (3-Nov-14, 3:18 pm)
பார்வை : 153

மேலே