கிளையற்ற பறவை

தானமாகக் கிடைத்த
நட்பு
திருப்பியெடுத்துக் கொள்ளப்பட்ட
துயரத்தினூடே யிப்போது
எல்லாக் கண்கள்
திறந்திருந்தும்
குருடனாயிருக்கிறேன் !

புவியின் அடர்வனம்
முழுவதும்
ஒரு சிறு கிளை கூடக்
கிடைக்காத பறவையொன்று
என்னுள்ளே
பறந்துகொண்டிருக்கிறது !

வேட்டைக்காரனுக்காகக்
காத்திருக்கும்
இறையின் கண்ணில் தென்படும்
வேதனையின் பசியோடு
இறந்த காலம் இல்லாத
காலண்டரை
தனது இறக்கைகளுக்குள்
வைத்திருக்குமது
சப்தங்களில்லாத காடுகளெங்கும்
தனது இணையைத் தேடி
சிறகடித்துச் சுற்றுகிறது !

மதில்களுக்குள்ளே அகப்பட்டுக்கொண்ட
உனது தெருக்களிடம்
அதரம் சிவந்த உதடுகளும்
முத்தங்களும்
இப்போதில்லை என்பதை
உயரப் பறக்கையிலது
அறிந்துகொண்டது !

பசியடங்காத சிதையொன்று
தனிமையின் தலையீட்டிற்கான
மறைவிடம் தேடி -
மறைவுகளில்லாத தலையீடுகளுக்காக
எரிந்துகொண்டிருக்க
சுற்றும் பறவை
தலைகுப்புற விழுந்து
சிதையெரி தழலில்
தனையழிக்கும் போது
எரியும் நெருப்பினில்
உனது நட்பு
யாருக்கும் புரியாத
மௌன ஸ்வரங்களில்
அழுது கொண்டிருக்கலாம் .

எழுதியவர் : பாலா (4-Nov-14, 7:08 pm)
பார்வை : 155

மேலே