சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் - கவிதைப் போட்டி - II - வது தலைப்பு
இந்த
சிற்ப(ங்களை)த்தை பேச வைக்கும்
சிற்பியே - உன்னை
செதுக்குகிறேன்.
சிந்தை எனும்
சிற்பக் கூடத்தில் - வார்த்தை
விந்தைப் புரியும்
வழக்கத்தைப்
பழக்கப்படுத்தினாய் - இந்தநாள் மன
புழுக்கத்தைப் போக்கடித்தாய்.
வடிவழகு உண்டு சிற்பத்திற்கு.
சொல்லழகுண்டு உன் விருப்பத்திற்கு.
கல்லுக்கு அழகில்லை - அதை
கலையாக்கும் விதத்திற்கு அளவில்லை.
சொல்லுக்கு அழகில்லை - அதை
சுருங்க வைக்கும் பதத்திற்கு முடிவில்லை.
சிற்பம் அது கலையெழில் பெற - தேவை
சிறு உளி எனும் கோல்
சொற்கள் அது கவி எழில் தர - தேவை
செழுமிகு எழுதுகோல்.
உளிக்கோலும் எழுதுகோலும்
ஒளிக் கொண்டு எழும்போது - சிந்திக்கும்
வலிமையினைத் தருகின்றாய்.
ஒரு
சிற்பியால்தான்
சிற்பங்களை பேசவைக்க முடியும்.
உன்
உணர்வினால்தால் - எழுத்துப்
புனர்வுகளை புலரவைக்க முடியும்.
இந்த சிற்பமும் - உன்னை
இன்ப சொற்களால் செதுக்குகிறது.
இனியவளே - எத்தனையோ
சிற்பங்கள் உன்னை
செதுக்கிகொண்டுதான் இருக்கிறது.
பல சிற்பங்களின்
படைப்புகளில் உந்தன்
பெருமைகளை அறிந்து வருகிறேன்.
சிறப்பானவளே - எந்தன்
செழுமதியில் - என்றும் தேயா
முழுமதியாய் வளர்வாயே.
பொறுப்பான சிற்பங்கள் - மனக் கசப்பெனும்
கறுப்பிலும் உன்னால்
வெறுப்பில்லாமல்
வெளுத்த வானம் போல்
வெண்மைப் படிந்து வளர்கிறது.
தன்மை அறிந்து நடப்பவளே
நன்மை அறிந்து நயமாய்
இன்மையினை களைவாயே.
களைய வந்த கற்பகமே.
வளையவந்து வாழ்விப்பாயே.