கவிதை வரம்
எண்ணில்லா நினைவுகளை
......ஏராள கனவுகளை
கண்ணெனவே நான்காத்த
.....கருத்துகளை கவிதைகளை
மண்ணைவிட்டு நான்போகும்
.....மணித்துளிக்கு காத்திருந்து
திண்ணுவிட காலமிங்கு
.....தீராத பசியோடு !
என்னிறைவன் தரும்துணையில்
.....எள்ளளவும் அச்சமின்றி
பொன்னைநிகர் புதுமைகளை
.....பூமியெங்கும் பாடிவைப்பேன்
விண்ணவரும் வியக்கும்படி
.....வியன்கவிதை நான்படைப்பேன்
வண்ணமலர் கூட்டமென்
....வார்த்தையிலே வயமிழக்கும்
தண்ணிஎன பொழிந்துவரும்
....தாகங்கள் தீர்த்துநிற்கும்
கன்னியர்கள் உள்ளத்தில்
....காதல்விதை தூவிவிடும்
கண்ணியமாய் தமிழ்மொழியை
.....காப்பதற்கு கைகொடுக்கும்
சின்னவரும் பெரியவரும்
....சிந்திக்கும்படி இருக்கும்
கண்டபடி பாடிடுமக்
....கருமங்கள் இருக்காது
உண்டயிடம் நாறவைக்கும்
....உருப்படிகள் கிடையாது
நன்றியுடன் நான்தருமின்
....நலமான கவிதைகளில்
சண்டைகளே இருக்காது
.....சரித்திரமும் சாட்சிநிற்கும்
என்னினத்தை தூக்கிவிடும்
....எண்ணமிதில் இருந்தாலும்
முன்னிருக்கும் மானிடர்கள்
....முழுமையுமே கவர்ந்திழுக்கும்
பின்னிருக்கும் பிரச்சனைகள்
....பெரியதுவோ சிரியதுவோ
தன்னிருக்கும் நம்பிக்கை
.....தகர்த்துவிடும் அத்தனையும்
அன்னையென ஆதரிக்கும்
.....அன்பாலே அழைத்தெவரும்
மின்னிடவே என்கவிதை
.....மெதுவாக பூச்சொரியும்
பன்னாடும் போற்றிடுமென்
.....பசுமைதமிழ் செழித்திடுமே
என்னாலே மீண்டுமொரு
.....ஏற்றத்தைக் கண்டிடுமே
சின்னதாய் இருந்தாலும்
.....சீரான என்பங்கு
முன்னவரும் பின்னவரும்
.....மொத்தமாய் ஏற்றிடுவார்
பின்னிருக்கும் காலமது
....பெருங்கவலை கொண்டிடுமே
என்னதான் செய்யுமென்னை
....எப்போதோ வரும்மரணம் ?
நின்னுதான் யோசித்து
....நிலைகுலைந்து போகாதா?
கிண்ணத்தில் கொண்டுசெல்ல
...கீரையல்ல என்வாழ்க்கை !
வண்ணத்தில் வரையாத
....வற்றாத ஜீவநதி !
இன்னும்நான் காத்திருப்பேன்
.....எமனென்னும் அத்திருடன்
என்னுயிரை எடுக்கும்முன்
.....எடுத்திடுவேன் அவனுயிரை
மண்ணுள் உறங்கும்முன்
.....மயக்கங்கள் தீர்ந்துவிடும்
தன்னால் நானெழுந்து
.....தைரியமாய் வேறிடத்தில்
கண்போன்ற கவிதைகளின்
.....கருவினிலே உருக்கொண்டு
எந்நாளும் இறக்காத
....இனியவரம் பெற்றிடுவேன் ...