மூன்றாம் பிள்ளை கருப்பு

மூன்றாம் பிள்ளை கருப்பு 3.11.14


மூன்று வருடங்களில் நிறைய மாற்றம்
மூன்றாம் பிள்ளையாய் அவன் வந்தபிறகு
எதைக் கண்டாலும் அவனுக்கு பதற்றம்.

கருப்பு என்றாலும் பயம்.
காகம் நிழல் கூட பிடிக்காது.
கல்யாண பத்திரிகை கொண்டுவந்த
கந்தசாமி முகவாதில் திறந்து
முன்னாள் நின்ற கருப்பு உருவம் பார்த்து
காணாமல் போனதுதான் மறக்காமல் பேத்தி
காதுகுத்து அழைப்பிதழ் தபாலில் அனுப்பினார்.
பக்கத்தில பாத்தா பயமாகுது சார்
பாவம் நண்பர் கொஞ்சம் நிறம் மட்டு.

இவனை வெறுப்பேற்ற என்றே
இரண்டு குட்டி நாய்கள் தினமும்
அடிக்கடி புறச்சுவர் வாசலில் வந்து
அப்பாவியாய் அண்ணாந்து பார்க்கும்.
கட்டிட வேலையாட்கள் கைலியில்
கடந்து போகையில் ஆயிரம் வாட்ஸ்
சப்தம் கேட்டு ஆடிப்போவர்கள்.
கால்சராய் ஆசாமிகளை கவனித்து குறைப்பான்.

பக்கத்து வீட்டு பூனைமேல் (கருப்பு)
பயமா அல்ல கோபமா தெளிவில்லை.
பூனையும் விடுவதாய் இல்லை
எப்போது பார்த்தாலும் அவன்
கண்களில் பட்டு சலவை
கற்களுக்கு இடையில் ஒளிந்து
வெளியே வர அடம் பிடிக்கும்
நடுவராய் யாரேனும் வரும்வரை.

தம்பி சாரின் குட்டிப் பேத்தி
தைரியமாய் கைநீட்டித் தொடும்
முத்த ஆசை கண்களில் தெரிய
சத்தமில்லாமல் பார்த்தபடி நிற்பான்.
தீபத் திருநாள் அவனுக்கு
தீராத பயத் திருநாள் பொழுதெல்லாம்
ஒவ்வொரு வெடியோசைக்கும்
ஓடி மறைவது சோதனை.

காலிங் பெல் அடிக்க மதில்சுவரில்
கை வைத்த கூரியர் பையன்
‘கை’யெழுத்து இல்லாமலே பின்பு
கவரை உள்ளே வீசத் தொடங்கினான் !
பகுதி நாட்கள் இந்து நாளிதழ் அவன்
படித்த மிச்சம் தான் உள்ளே வரும்.
விடுமுறைக்கு வரும் சொந்தகாரர்கள்
விடைபெறுவது புதுச் செருப்போடுதான்.
வீதியில் போகும் மனிதர்கள் கொஞ்சம்
பீதியோடு கடந்துபோவது வேடிக்கை..
அடிக்கடி விஜயம் செய்யும் சிலபேர்
அன்போடு கைபேசியில் அழைக்கிறார்கள்.


இவனது உலகத்தில் ராசா நான்
புறம் உள்ளவர் எல்லாம் எதிரிகள்
வீடும் வசிக்கும் நான்கு மனிதர்களும்
விட்டு ஒன்றுமில்லை அவனுக்கு.
பல நேரங்களில் மனதின் வியர்வை மணம்
பாவம் இவன் உணர்வுகளுக்குத்தான் புரிகிறது.
இரவு காற்று கொள்ள முற்றத்தில்
இருக்கையில் அமர்ந்தால் செல்லமாய்
கால்களுக்கிடையில் சுருண்டு கிடப்பான்
காக்கும் கருத்த தளபதியாய்
காலம் மாற்றாத்த உண்மைக் காதலால் !

எழுதியவர் : கர்ச்சாகின் (5-Nov-14, 10:05 pm)
சேர்த்தது : GOVINDAN MANIKANDAN
பார்வை : 67

மேலே