தமிழ் முஸ்லிம்களும் பொங்கலும்2
வட இந்தியாவில் ஒரு பழக்கம் உண்டு அது பண்டாரா வழங்குதல் அதாவது ஒரு கடவுளின் பெயராலோ , இறந்த உறவுகளின் பெயராலோ ,அல்லது உள்ள உவகையாலோ ஒருவரோ அல்லது ஒரு குழுமமோ ரொட்டி , பூரி போன்ற உணவுகளை சமைத்து அனைவருக்கும் வழங்குவர். இந்த செயலுக்கு எந்த மத அடையாளமும் கிடையாது .
தமிழர்கள் இதற்கும் ஒரு படி மேலாக சென்று இதே விசயங்களை அடிப்படையாக கொண்டு அனைவரும் தான் சார்ந்த சமூகம் ஒன்றாக ஒரே வகை உணவை உண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி ஏழை செல்வந்தன் என்ற பாகு பாடு உடைத்து பொங்கலிடுதல் ,கூழ் விளம்பல் என்ற சமத்துவ உணவு பரிமாற்றம் உடையவர்களாக மிக உயர்ந்த நாகரீகத்தை உலகுக்கு பறைசாற்றினர் . அதற்க்கு பொங்கலிடுதல் என்று பெயரிட்டனர்.
தமிழர்கள் “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் “, உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல் ,வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் ,
”தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;” பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் . என உணவை பகிர்ந்துண்டு குழுமமாக இணைந்து சம உணவு உண்டு வாழ்ந்தலை தனது பண்பாடாக கொண்டிருந்ததன் யதார்த்த சான்றே இன்றைய பொங்கலிடுதல் ஆகும் .
ஆம் இந்த சமூகம் பல அரிய போற்றுதலுக்குரிய பழக்கங்களை தங்களின் வழிபாட்டு முறையோடு இணைத்திருந்தது. வருடத்தின் அனைத்து மாதங்களிலும் தமிழர்கள் பொங்கலிடுதலை வழமையாக கொண்டிருந்தது குலதெய்வத்தின் பெயரால் , கடவுளர் பெயரால் ,நதியின் பெயரால் , விளைநிலத்தின் விவசாய நிகழ்வுகளின் பெயரால் இந்த பொங்கலிடுதல் அதன் மூலம் ஒரு சமூக உறவு பேணல் என்ற மாண்பு தொடர்ந்து வருகிறது .
இதில் ஞாயிறு ,காளை என வேளாண் சார்பு பொங்கல் தை மாதத்தில் அனைத்து சமூகத்தாலும் ஒரே நேரத்தில் கொண்டாட படுவதால் பொங்கல் பண்டிகை தமிழர்களின் இன்றி அமையாத பண்டிகை ஆகிறது.
மேலும் இந்த மாதத்தின் தட்பவெப்ப நிலையும் கார் ,குளிர் ,கடந்து இளவேனிலுடன் கோடை நோக்கி பயணிப்பதாக உள்ளது . மார்கழி பனியில் ஞாயிறு அருமை நிச்சயம் உணரப்படும் . இது அறுவடை மாதமாக உள்ளதால் பொங்கலிட்டு அனைவருக்கும் பகிர்ந்து வழங்கல் இயல்பானதாக அமைகிறது.
இந்த திருவிழா மிக சிறப்பானதாக சொல்லப்பட்டாலும் தமிழர்கள் பொங்கலிடுவதை அனைத்து மாதங்களிலும் வெவ்வேறு ரூபத்தில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த விழா காலசூழலுக்கு ஏற்ப இன்று அதன் மூல காரணம் மறைந்து நகர்மயமாதல் , தொழில்நுட்ப மாற்றம் , கணணி சார் வாழ்வியல் ,போன்ற காரணங்களால் ஒரு சடங்கு போலவும் , ஏதோ விவசாயி ,ஞாயிற்றுக்கு நன்றி நவிலும் விழா போலவும் அடையாளமிட பட்டுள்ளது .
இன்றைய பொங்கலுக்கும் ,பாரம்பரிய பொங்கலுக்கும் வேறுபாடுகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது அது பற்றி பின்னர் பார்ப்போம் ..
எந்த வித மத இன வேறுபாடுகள் இல்லாமல் வேளாண்மை, முன்னிறுத்தி ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் இதை கொண்டாடி வருகிறது .
இஸ்லாமிய தமிழர்களும் இதனை கொண்டாடத்தான் செய்கிறார்கள் . என்ன இதில் வழிபடுதல் என்ற பகுதியை மட்டும் புறக்கணிக்கின்றனர் . ஏனெனில் இஸ்லாமிய கொள்கை இறைவனை தவிர வேறு எதனையும் அது முஹம்மது நபியாயினும் சரி ,ஈன்ற தாயாயினும் சரி ,இயற்கையாயினும் சரி அதனை வழிபடுதல் கொள்கை முரணாக நம்பப்படுவதால் அதனை தவிர்த்து விடுகின்றனர் .
ஒட்டுமொத்தமாக இஸ்லாமிய தமிழர்கள் வாழ்வில் இந்த பொங்கலிடுதல் எவ்வாறு மாற்று பரிணாமம் கொள்கிறது என்பதை பின்னர் பார்க்கலாம் ..
நண்பர்களே இது எனது பார்வை இதில் ஏதேனும் தவறு இருந்தாலோ ,அல்லது இது தொடர்பாக தங்களுடைய கூடுதல் தகவல்களை தெரிவிக்க விரும்பினாலோ தவறாது கருத்துக்களை பதிவு செய்யவும்.