இரும்பு மனுசி
![](https://eluthu.com/images/loading.gif)
ஒட்டுவீட்டிற்குள்...
ஒட்டியிருக்கும் என் உயிரை
எப்போதாவது
எட்டிப்பார்க்கும்
சில்லென்ற மழைத்துளியும்
சில மனதும் ?
அழையா விருந்தாளியாய்
அவ்வப்போது வரும்
காகம் கூட
கண்டுகொள்ளவதில்லை
கதவடைத்த என் வீட்டை ...
எதிர்வீட்டு சன்னல்வழி
என் நாசி துளைக்கும்
சமையல் வாசம்
எதிர்பார்க்க வைக்கும்
ஏக்கமாய் ...
மிச்ச குழம்பிற்காக ?
கவர்மெண்டு பணமும்
கஞ்சிக்கு அரிசியும்
கதவு தேடிவந்தாலும்
கைகளில் ஏனோ வலுவில்லை ...
தளர்ந்த உடல்கொண்டு
தடுமாறி நான் சமைத்தால்
தின்ன யாருண்டு
என்னைத்தவிர ...
குனிந்த உடலும்
குறுகிய நடையும்
குறைந்த பார்வையும் கொண்டு
எதைத் தேடுவேன்
எமனுக்கிரையான
என் கணவரின் உயிரைவிட ?
கிழிந்த சேலையில்
கிழியாத மனம்கொண்டு
கிழவியான பின்பும்
கிணற்று தவளையாய்
என் தேடல் ...
எங்கோயிருந்தபடி
என்னை மறந்து
"என் பேரனைக் கொஞ்சும்
என் மகனே "
எதை சாதிப்பாய் ?
இந்த இரும்பு மனுசியின்
இற்றுப்போன உடல்தான்
உன்னை பெற்றுப் போட்டதென்ற
உண்மையை ..நீ
உணராமல் ?
______________________________________
** குமரேசன் கிருஷ்ணன் **