காத்திருக்கின்றேன்

ஒரு அடைமழையின்
காலைப் பொழுதில்
கூண்டுகளேதுமற்ற யென்
ஜன்னலைத் திறந்து
வைத்துக் -
காத்திருக்கின்றேன் !

நேற்று இதனூடாக
என் மனத்தடம் விட்டு
வெளியேறி
இருட்டின் கிளைகளுக்குப்
பறந்து போன
தவிட்டு நிறத் தேன்சிட்டின்
வருகைக்காக !

என் பத்தாயத்தில்
எதையும் கைப்பற்றாமல்
தத்தித் தத்தி -
மூலை முடுக்குகளனைத்து
இரகசியங்களிலும்
உன் பறவை வாசத்தைப்
பூசி விட்டுப் பறந்து விட்டாய் !

கவண் விட்டெறி கல்லாய்
நீ கொரித்த
தானிய உமிகளை
உன் நினைவுகளென
விட்டு விட்டு
என் உயிர்த் துடிப்பை
உன் சிறகுகளுக்குள்
ஒளித்துப் பறந்தாய் !

இதுவரை நானறியாப்
பறவை பாஷையோடும் -
நீ தேடி வந்த
பொன் நெல் மணிகளோடும் -
நீ உதிர்த்து விட்டுப்
போன
உன் உள்ளிறகினை
அதே கத கதப்புடனும்
கையிலேந்தி
வலைகளேதுமற்ற
என் ஜன்னல் திறந்து
காத்திருக்கிறேன் !

நட்பின் ஆகாயத்தில்
பேசித் தீர்க்கலாம் வா !

வேடர்களேதுமற்ற
வேடந்தாங்கல்
தன் மொத்த விருட்சங்களையும்
தேங்கு நீரில்
கிளை பரப்பி -
உன் மென்கால் நகம்
பதிய
ஒற்றைக் கால் தவமிருக்கிறது
நொடியும் தாமதிக்காதே
வசந்தம் முடிவதற்குள்
வந்து விடு .

எழுதியவர் : பாலா (6-Nov-14, 8:29 pm)
Tanglish : kaathirukkindren
பார்வை : 371

மேலே