உன்னைச் சிந்தித்தால்-வித்யா

உன்னைச் சிந்தித்தால்-வித்யா

உன்னைச் சிந்திக்கும் போதெல்லாம்
என்னில் அடை மழை........

தாவணியணிந்த
மழைத்துளியொன்று
உதடுகடித்து
வெட்கப்படுவதாய்
என் சிந்தனையில் நீ

மழைபொழிய மறுத்து
எனைவஞ்சிக்கும் வானம்
மேகம் பொழிவதாய்
என் சிந்தனையில் நீ

நீ காலதேவனின்
பொன்சிறகா.....?
மழைத்துளிகளால்
கைவிலங்கிடுகிறாயே........

நீ புதுவானின்
உதயரேகையா...?
என்னிதயப் பெருவெளியில்
அஸ்தமிக்கிறாயே........

நீ மழைநாட்டின்
ஒற்றனா....?
என் மனநாட்டில்
போர் சேதி சொல்கிறாயே......

நீ உணர்வலைகளின்
பேரழுத்தமா ..?
என் பெண்மை
உள்வாங்குகிறதே......

இறை தேடித்திரியும்
என் மனப் பறவை
உன் நினைவு மழையால்
தாகம் தணிகிறது

உன் சிந்தனையில்
கல்லெறிந்த குளமாய்
நீரோவியம் வரைகிறேன்
நீட்சியாய்......நீரலையாய்
குழைகிறேன்........!

உன்னைச் சிந்தித்தால்
நான் கவியாகின்றேன்......!!



-வித்யா
ME (first year applied electronics...)

எழுதியவர் : vidhyaa (7-Nov-14, 8:57 pm)
பார்வை : 192

மேலே