புதுக்குமுகம் நாம் படைப்போம்

புதுக்குமுகம் நாம் படைப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

துடிக்கின்ற சிதறலாக
உடல்பிய்ந்து எரிந்திடவே
வெடிக்கின்ற குண்டுகளா
விடியலுக்கு ஒளிகூட்டும் ?

குருதியாறு ஓட்டத்தில்
குமுறுகின்ற ஓலமெழ
உருவாக்கும் கலவரமா
உயர்மதத்தின் பெருமைபேசும் ?

போர்க்களமாய்த் தெருக்களெல்லாம்
பெயர்ந்துசுடு காடாக
ஆர்க்கின்ற வன்முறையா
அருங்கொள்கைத் தீர்வாகும் ?

ஒற்றுமையாய்ப் பலகாலம்
ஒருகுலமாய் வாழ்ந்ததெல்லாம்
வெற்றுரையாய்க் கனவாக
வேற்றுமையில் மடிவதுவோ ?

சாதிகளும் மதங்களுமா
சாதனையை இங்களிக்கும் ?
பேதங்கள் நாம்வளர்த்தால்
பெருமழிவே முன்நிற்கும் !

மனிதநேயம் ஒன்றேதான்
மாந்தர்தமை வாழவைக்கும் !
புனிதவன்பில் உழைத்துயரப்
புதுக்குமுகம் நாம்படைப்போம் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (11-Nov-14, 4:15 am)
பார்வை : 347

மேலே