பறவை மொழி

எத்தவம் செய்தேனும்
பறவைகளின் மொழியறியும்
வரம் பெற்றிட
வேண்டும் !

சொற்களின் பறவைகளே
என்
கவிதைகளுக்கான கம்பளத்தை
உங்கள் சிறகுகளால்
நெய்கிறீர்கள் -
மொழியற்று ஒலிக்குமுங்கள்
அலகின் லிபியறிய
உங்களின் அழகு
மொழியறிய வேண்டும் !

ஆகாயத்தின்
வளிமண்டல மெங்கும்
புதைந்து கிடக்கும்
ஓராயிரம் பறவை
மொழி சப்தங்களை
காற்றினில் அகழ்ந்து
கண்டறியும் முறையறிய
பறவை மொழி யறிந்திட வேண்டும் !

கதிரவன் விரல் நீட்டிக்
காலை ஜன்னல்
நுழையு முன்பே
மூக்கோடு மூக்குரசி
பிரியத்தில் நெக்குருகி
தோட்டத்தில் கொஞ்சிடும்
தேன்சிட்டின்
காதலின் ரகசிய
பாஷை யறிய
பறவை மொழி யறிந்திட வேண்டும் !

தொளைநீள்
வெண்பஞ்சு மேகம்
கிழித்து -
ஆகாயம் நுழையும்
உலோகப் பறவைக்கீடாய்
இறக்கை அசைக்காது
விண் பறக்கும்
கருடனிடம்
அதன் ரகசியமறிய
பறவை மொழி யறிந்திட வேண்டும் !

பாலையும் , நீரையும்
பிரித்தறியும்
வெள்ளன்னத்திடம்
அதன் விஞ்ஞான தந்திரம்
அறிந்திடவும்
காதலருக்கு தூது செல்லும்
நுணுக்கம் அறிய
பறவை மொழி யறிந்திட வேண்டும் !

மழை பெய்யுமுன்பே
மலைசாரலில்
தோகை விரித்தாடும்
மயிலழைத்து -
சாரலின் வருகையை
எப்படி அறிகிறதென்ற
சந்தேகத்தை நிவர்த்தி
செய்ய
பறவைகளின் மொழியறிந்திட வேண்டும் !

ஆண்டு தவறாது
கடல் , மலை , பாலை தாண்டி
கண்டம் விட்டு கண்டம்
வலசை போகும்
பறவைகள்
தடுமாற்றமின்றி
வழியறிதலின் தடமுணரும்
ஆச்சரியம் அறிய
பறவைகளின் மொழியறிந்திட வேண்டும் !

ஞாயிற்றுக் கிழமைகளின்
காலைகளில்
தன் சகாக்கள்
கழுத்தறு பட்டு
குருதி கொப்பளிக்கும்
கொடுமை கண்டும்
தானியம் கொறிக்கும்
கூண்டடைக் கறிக் கோழிகளின்
கையறு நிலை மனோநிலை யறிய
பறவைகளின் மொழியறிந்திட வேண்டும் !

செல் பேசி அலைகளற்ற
உயர் மின் அழுத்தக்
கோபுரங்களற்ற-
பசுந்தளிர் மரம் நிறை
தோட்டம் ஒன்று
உன் மனம் நிறை
தானியங்களுடன்
என்னிடம் உள்ளது
எங்கு சென்றாய்
என் சிட்டுக் குருவியே
எனக் கூவி அழைத்திட
பறவைகளின் மொழியறிந்திட வேண்டும் !

அனைத்திற்கும் மேலாய்
காற்றினில்
அசைந்தாடும்
பொன் நார்க் கூடொன்றினை
ஆளரவமற்ற
அடர் வனம் நடுவே
கட்டித் தரச் சொல்லி
தூக்கணாங் குருவியிடம்
மனுச் செய்திட
பறவைகளின் மொழியறிந்திட வேண்டும் .

எழுதியவர் : பாலா (12-Nov-14, 10:24 pm)
Tanglish : paravai mozhi
பார்வை : 376

மேலே