உனைத்தேடி வீதிகள் வாரா

உனைத்தேடி வீதிகள் வாரா
பாவலர் கருமலைத்தமிழாழன்
கண்மூடிக் கனவுகளில் கதிரைக் கண்டால்
காலையெழில் இன்பத்தை நுகர்ந்த தாமோ
விண்முளைக்கும் விடியலினைக் காண்ப தற்கே
விழித்துவெளி வந்தால்தான் தெரியும் ஞாலம்
மண்ணுக்குள் புதைகின்ற விதையும் தானாய்
மரமாகி வளராது! நீரை ஊற்றிக்
கண்ணாகத் தினம்பார்த்து வேலி யிட்டு
காத்தால்தான் மலர்பூத்துப் பலன்கொ டுக்கும் !

வீட்டிற்குள் கால்மடக்கி அமர்ந்தி ருந்தால்
வீதிகளோ உனைத்தேடி வந்தி டாது
ஏட்டிற்குள் இருந்ததினை விழுங்கி விட்டால்
ஏற்றந்தான் தானாக வந்தி டாது
கூட்டிற்குள் முடங்காமல் இரையைத் தேடி
குறுஞ்சிறகை விரித்தலையும் குருவி போல
நாட்டிற்குள் கால்பதித்து நடையைக் காட்டு
நாற்றிசையும் உன்சுவடின் பின்னே நிற்கும் !

உன்னுள்ளே நம்பிக்கை ஒளியை ஏற்று
உனக்குள்ளே முயற்சியெனும் எழுச்சி ஏற்று
உன்கரந்தான் உனையேற்றும் ! அறிவைத் தீட்டு
உரத்தோடு தடைகளினைத் தூள்தூ ளாக்கு
முன்னேற்றம் என்பதுன்றன் மூச்சாய் ஆக்கு
மூலதனம் என்கின்ற உழைப்பை ஈவாய்
விண்முட்டும் இமயத்தின் சிகரம் செல்வாய்
வியந்துன்னைப் பார்காண புகழில் வெல்வாய் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Nov-14, 1:26 pm)
பார்வை : 155

மேலே