நான் ஒன்றும் செய்வதில்லை - யாழ்மொழி

நான் ஒன்றும் செய்வதில்லை..!

ஆம்!

நான் ஒன்றும் செய்வதில்லை...!

ஒருவேளை சோற்றுக்கே
ஒருசாரர் தவித்திருக்க
மகராச போகத்திலே
மறுசாரார் களித்திருக்கும்
மானக்கேடதுவே -எம்
மண்ணின் வழக்கானபோதும்

விலைவாசி உயர்வதுவோ
விண்கிழித்து சென்றிடவே
பின்தொடர வக்கற்று
பட்டினியில் பலர் மடியக்கண்டும்

பால்மறவா பிள்ளைக்கூட
பாவச வெறிகொண்ட
பாவிகளின் உணர்ச்சிக்கு
பாழாக்கப்பட்டபோதும்

அதிகாரமுள்ளவரோ
விலைமகளிர் இல்லங்களில்
அம்மணப் பகிர்விலிருக்கும்
அவலநிலை கண்டபோதும்

கையூட்டு வாங்குவதே
கடமையென்று கொண்டசிலர்
கைநீட்டி பிச்சைகேட்க
கண்ணெதிரே கண்டபோதும்

உழுதவன் உணவின்றி
வறுமையிலே வயிறொட்டி
சாவதே விதியென்று
சான்கயிற்றை நாடியபோதும்

எல்லைத்தகராரில்
சரஞ்சரமாய் எம்மக்கள்
இரக்கமற்ற தோட்டாக்களுக்கு
இறையானபோதும்

அங்கே
என் உடன்பிறப்பின் பிறப்பிடத்தை
வெறிநாய்கள் வேட்டையாடி
குருதியினை ருசிக்கக்கண்டும்

விட்டுச்சென்ற மிச்சத்தினை
ஊடகங்கள் படம்பிடித்து
விற்பனையில் வைக்கக்கண்டும்

தகவல் நிரப்பிய கடிதங்களால்
தவறெல்லாம் தீர்ந்துவிட்டதால்
தலைவர்கள் வேலையற்று
தரைகூட்ட கண்டபோதும்

இன்னும் இன்னுமாய்
நாகூசும் நாசமெல்லாம்
எம் நாட்டின்
நடைமுறையாகக் கண்டும்

நான் ஒன்றும் செய்வதில்லை...!

ஏனெனில்..?

சிலரூபாய் நோட்டுகளுக்காக
ஓட்டுரிமை ஒன்றைக்கூட
விற்றுவிட்ட குடியானவர்களில்
நானும் அடக்கம்..!

எழுதியவர் : யாழ்மொழி (13-Nov-14, 1:36 pm)
பார்வை : 149

மேலே