காற்றில் மிதக்கும் இறகு || தேடல் 2 ||

காற்றில் மிதக்கும் இறகு -- தேடல் 2 --
==================================

சிறு சிறு பறவைக்கூட்டத்தை விட்டு
சில தூரம் பயணித்தேன் ...
மனம் மலரும் நினைவுகளை
மறவாது அசைபோட்டது !

அனாதையான எனக்கு
அற்புதமாய் அமைந்த
வழிப்பாதையை நினைத்து
வியந்தது ...மனம்

"வாழ்க்கை எப்போதும் '
எதிர்பார்க்காதவற்றை
எதிர்பாராத தருணங்களில்
வழங்கும் வள்ளலென்பதை
வழித்தடங்கள் உணர்த்தியது
நீங்காத நினைவுகளாய்
நிழலாடியது மனத்திரையில் ..

சிறகாய் நான் பறந்த நொடிகளில்
சிலிர்க்கவைத்த அனுபவத்தை
சிறிது ...சிறிதாய் எனக்களித்த
இறைவனுக்கு
இதயம் நன்றிகளை
இயன்றவரை உரக்க உரைத்தது ...

எதை நோக்கி
என் பயணமோ தெரியவில்லை ...
எதற்காக பிறந்தேனோ
எனக்குப் புரியவில்லை ?

வாழ்வின் போக்கில்
வந்துவிழும் நொடிகளின்
நிகழ்வுகளை மட்டும் ..ரசிக்க
நிச்சயம் மனது பழகிவிடும் ..

என்னை உதிர்த்துவிட்டுப்போன
என் பறவையின் செயல்கூட
எனைப்பக்குவப்படுத்த
எழுந்ததாய்..உணரத்தொடங்கியது
மனம் ...

என்னோடு
என்மனம் இவ்வாறு பேசி
எவ்வளவு நாளாயிற்று ?
என்ன இது ..

இவ்வளவு வேகமாய்
இந்த காற்று எனையெங்கு
இழுத்து செல்கிறது ?

இது என்ன ...
"நாசியை "
சுவாசிக்கவே விடாதவொரு
கொடிய.... நெடி ?
எங்கிருந்து வருகிறதிது
எங்கிருக்கிறேன் ...நான் !

"மஞ்சள் நிறத்தில் "
குப்பைகளைப்போல் என்ன இங்கு
குவிந்து கிடக்கிறது
துர்நாற்றம் வீசும் இதுயென்ன
மனித கழிவுகளா ???
அவ்வாறெனில்
கழிவுகளுக்கு மத்தியில் நானா ?

மீட்டுச்செல்லுங்களேன்
இங்கிருந்து யாரவது ?
காற்றே எனை ...
இழுத்து செல்லேன்
வேறிடம் நோக்கி ...

ஏதோ சத்தம் எழுகிறதே ..
என் எதிரே வருவது யார்
வருக நண்பா வருக
"எனை மீட்டுச் செல்லேன் "

என்ன இது ..
என்ன நடக்கிறதிங்கு
என்கண்கள் காண்பது
மெய்யா.. பொய்யா..
என்ன அவலம் இது ?

"" மனித கழிவுகளை ...
மனிதனே அகற்றுகிறானா ???""

இது இன்னும் தொடர்கிறதா
இறைவா இது என்ன சோதனை ...

சற்று முன்பு வரை
சந்தோசங்களை அள்ளி தெளித்த நீ

என் இதயத்தை
ஏனிப்படி இரண்டாக கிழிக்கிறாய் ?
இறையே
இதுதான் உன் ஆட்டமா ..
இதை உணர்த்தத்தான்
இங்கெனை இழுத்தாயோ ?

இவ்விடமிட்டு எனை அகற்றாவிடிலும்
இனி கவலையில்லை
இம்மக்களின் வாழ்விற்கு ..இன்றே
இனிய விடியல் கொடு
இறைவா ..என் இறைவா ..
_________________________________________________________________________________
( இறகுகள் மிதக்கும் ) @@ குமரேசன் கிருஷ்ணன் @@
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
((காற்றில் மிதக்கும் தேடல் -1 , படிக்காத தோழர்கள் கீழே யுள்ள கவியினை படித்த பின் தேடல் -2 படிக்கவும் ))

அந்திம நேரத்தில்
அந்த ஒற்றைப் பறவை
" அனாதையாய் "
அன்று உதிர்த்துவிட்டுப்போன
அதன் இறகு நான் ?

அதன் இயக்கத்திற்கென்
அஸ்தமனக்காலம் வரை
அயராதே உழைத்தேன்
ஆனாலும் ஏனோ ?

தனியிறகாய் ...
தரைநோக்கியின்று
தவித்தலுடன் நகர்கிறேன் ...

வான்வழி பயணிக்கையில்
வசந்த அழைப்புகள்
வந்து சேரவில்லை ...ஏதும் ?

வழிதப்பிய மேகக்கூட்டத்தின்
வரவேற்புகள்
வந்து சேர்ந்தன ... சிறு மகிழ்வாய் !

காற்றின் திசையில்
கரம் கோர்த்து
நட்பு பாராட்டி
நடை பயின்றேன் புதுமையாய் ..

விடியல் விட்டுசென்ற
மிச்சத்தின்
எச்சம் ...இன்னும்
சிலநொடிகள்தான் ...

வானவில்லின்
வற்றாத நிறம்கண்டு
வாட்டம் விலக்கி
அதன் நிறங்களை
அள்ளிப்பூச
ஆவல் கொண்டேன்...

வானத்து நிலவு
வரத்துவங்கும்
வாடாத பொழுதைக் காண
வியந்து நிற்கிறேன்
விழி திறந்து !

அழகு குறையாத
அதிசயத்தூரல் என்மேனி தொட
கொஞ்சம் நனைந்தேன்
நெஞ்சம் மறந்தேன்
வெட்கம் அடைந்தேன் ..

காற்றில் மிதக்கையில்
கவலை துறந்து
அதன் போக்கிலே
அலைபாய்கையில்
அளப்பரிய ஆனந்தம்
என்னுள்ளே ..இடைவிடாது
எதிர்திசைக் காற்றாய்
என்மேனியெங்கும் ..

சிறுசிறு பறவைக்கூட்டம்
சில்லெனப்பட்டு
சிறகுகள் நீட்டி
சில நொடிகள்யென் பாதைமாற்ற
சிறிது பயணித்தேன்
சிந்தை மறந்து அதன் வழியிலே ?

எந்தன் வழிப்பாதையெங்கும்
என்னைத் தொட்டுச் செல்லும்
எல்லையில்லா உறவுகள்
என் செவிகளில்
அழுத்தமாய் உரைத்தது
"அனாதையாய் இப்புவியில் "
யாருமில்லையென்று !
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
காற்றில் மிதக்கும் இறகு தேடல் 1 @@ குமரேசன் கிருஷ்ணன் @@

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (14-Nov-14, 12:47 am)
பார்வை : 231

மேலே