கனவுகள் இன்றைக்கு நனவாகும் நாளைக்கு
கண்ணிமைகள் மூடினாலும் சிந்தனைச் சூரியனைப்போலே
சுட்டெரிக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் !
கண்டகனவு மெய்யாக பிடியகலா உடும்புப்போலே
வைராக்கியக் கனவு மெய்ப்பட வேண்டும் !
ஊற்றெடுக்கும் பட்டறிவை குடுவையில் அடைத்து
தினம் குடிக்குங்கனவு மெய்ப்பட வேண்டும் !
ஆதவனின் ஒளிபோலே ஆசானின் அறிவென்று
எவனும் உணருங்கனவு மெய்ப்பட வேண்டும் !
முக்கனிச் சுவைபோலே கற்றலில் சுவைகாண
கல்விமுறை மாறுங்கனவு மெய்ப்பட வேண்டும் !
தாய்ப்பால் பருகும் இன்பம்போலே தமிழ்மொழிவழி
அகன்றகல்வி கற்குங்கனவு மெய்ப்பட வேண்டும் !
மாணவர்கள் மூளைக்கு மின்சாரம் பாய்த்தார்போலே
பாடங்கற்கும் கனவு மெய்ப்பட வேண்டும் !
மின்சாரமில்லா மின்வெட்டுப்போலே இன்னல்களில்லா இளைஞர்களாக
தினம்கானும் கனவு மெய்ப்பட வேண்டும் !
இயற்கைச் சமநிலைபோலே ஆண்பெண் நிகர்நிலையாகி
நிலைக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் !
மீனவர்களின் கடலானது இனிக்கும் இன்னமிர்தாய்
நிலைதிரியும் கனவு மெய்ப்பட வேண்டும் !
கூலித்தொழில் ஆற்றுவோர் குல(ள)த்தில் நீர்வற்றாது
தூறெடுக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் !
உழவனின் தொழிலுக்கு ஐம்பூதமும் உதவியாற்றி
உசிதமாகும் கனவு மெய்ப்பட வேண்டும் !
பன்னாட்டு முதலைகள் தன்நாட்டுக்கு பயந்தோடும்
இந்நாட்டின் கனவு மெய்ப்பட வேண்டும் !
தீத்தொழிலாற்றும் அரசியலாளர்கள் தீயிலிட்ட பனிபோல
ஆவியாகும் கனவு மெய்ப்பட வேண்டும் !
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து எட்டுத் திசையும்
செம்மையாற்றும் கனவு மெய்ப்பட வேண்டும் !
தமிழ்ஈழத்திற்கு தீமையிழைக்கும் சழக்கரெல்லாம் தமிழ்மீனுக்கு
இரையாகும் கனவு மெய்ப்பட வேண்டும் !
பிறமொழிச்சொல் இல்லாத் தமிழ்ப்போலே மாசில்லா
உலகாகும் கனவு மெய்ப்பட வேண்டும் !
பன்முறை தோற்பினும் சூரியகாந்திப்போலே நிமிர்ந்தெழும்
பண்பறியும் கனவு மெய்ப்பட வேண்டும் !
தோன்றும் எண்ணம் மறைவதற்குள் செயலாற்றும்
துரிதமனதாக கனவு மெய்ப்பட வேண்டும் !
வளமான எதிர்காலத்து வளரும் வானவில்லின்
வண்ணமாகும் கனவு மெய்ப்பட வேண்டும் !
மூங்கில்மரம் குழலாய் மாறும் நிலைபோலே
துகிலாதக்கனவு மெய்ப்பட வேண்டும் !
நாவும் வாயுமாய் நாம் ஒன்றாகி
நாதமாகும் கனவு மெய்ப்பட வேண்டும் !
மூளையும் சிந்தனையும் கொண்ட காதல்போலே
தமிழ்க்காதல் கனவு மெய்ப்பட வேண்டும் !
நரம்பு அறுத்து காட்டினாலும் தமிழ்க்குருதி
வழிந்தோடும் கனவு மெய்ப்பட வேண்டும் !
செத்தபின்னும் செவி கேட்டால் தமிழ்ப்பாவாய்
கேட்கும் கனவு மெய்ப்பட வேண்டும் !
தீவிரவாதம் உண்டென்றால் தீவிர வாதமாய்
மட்டொழியும் கனவு மெய்ப்பட வேண்டும் !
முட்டாளென நமைநினைக்கும் மூடனுக்கு இவைபொய்
என்றுரைக்கும் கனவு மெய்ப்பட வேண்டும் !
மின்னலின் மின்சாரமாய் செயலாற்றி வல்லரசாய்
நாம்மாறும் கனவு மெய்ப்பட வேண்டும் !
'இந்நாடுபோலே என்னாடுமுண்டோ?' என்று அன்னியர்கூறும்
நாளாக கனவு மெய்ப்பட வேண்டும் !
'உயிர்நாடிதானே நாட்டுக்கன்றோ ?' என்று நான்கூறி
உயிர்விட கனவு மெய்ப்பட வேண்டும் !
------------------------------------------------------------------------------
பின்குறிப்பு :
தமிழ்வழியில் கற்காவிடினும்
தமிழ்மொழியால் வாழ நினைப்பவன்
தமிழுக்காக வாழ்ந்து களிப்பவன்
நான் தமிழ் மாணவன்
தமிழும் ஆனவன் !
------------------------------------------------------------------------------
இப்படிக்கு ,
உணர்வுகளுடன் ,
சரவண.உயிரா.( Jeeva Saravanan ) (விழுப்புரம்),
இளநிலை கட்டிடப்பொறியியல்,(முதலாமாண்டு),
சென்.ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி,
சோளிங்கநல்லூர் ,
சென்னை .
------------------------------------------------------------------------------