யார் யாசகன் - சந்தோஷ்

யார் யாசகன் ?
---------------------------


சாலையோர தேநீர் கடை.
உடலுக்குள் ஊடுருவிய
குளிரை, தேநீரை
உட்புகுத்தி
வெளியேற்றிக்கொண்டிந்தேன்.

ஏழ்மையின் வண்ணத்தில்
கையில் ஒடுங்கிய
ஈய பாத்திரம்.
பாத்திரத்தை விட
ஒடுங்கிப்போன உடற்கூட்டில்
ஓர் உருவம்..!

சீவப்படாத தலைமுடி.
யாசகத்தின் வாசம்.
பசியேறிய வயிற்றில்
ருசிமரத்துபோன நாக்கை
நிறம்மாறிய பல்லில் கடித்து
கெஞ்சி கெஞ்சி
கேட்டான் அந்த சிறுவன்..

“ அண்ணா...! ”
வெளி வீழ்ந்த சொல்லோடு
கையேந்தியது மீதி வார்தைகள்.

“ டீ குடிக்கிறீயா பா ? “
பாரி வள்ளல்
நானேதான் கேட்டேன்.

தலையாட்டினான்
வேண்டாம் என்று..

“டீ வேண்டாம்ன்னா
வடை வேணும்னாலும் சாப்பிடு”

வேண்டாம் என்று
தலையை அரைக்குறையாக
ஆட்டினான்...

“ சரி..இந்தா இரண்டு வடை “

கையில் ஏந்தி
வாயில் புன்னகையிட்டான்.
ஏழை சிறுவன்.-நான்
இறைவனை பார்த்தேன்.

இன்னும் போதுமான
மனசாட்சியில்லாமல்
போதுமான்னு கேட்டுவிட்டேன்.

ஏக்கத்தோடு
எதிர்திசைக்கு சாலை
கடந்து
பயணித்தது அவனின்
பார்வை..!

அங்கே..
ஒரு சிறுமி..!
ஒரு கிழவி..!
இவனின் வருமானத்தை
எதிர்நோக்கி..!

சட்டைப்பையில்
கைநுழைத்து
ரூபாய் நோட்டுகளை
தேடினேன்

விரலில் சிக்கியது
நூறு ரூபாய்..!

இந்த ரூபாய் தாள்
பிச்சைக்கு உகந்தது அல்லவே..!

மீண்டும் என்விரல்கள்
சட்டைப்பையில்...!
இம்முறை மாட்டியது
இருபது ரூபாய்..!

இந்த ரூபாய் தாள்
இவனுக்கு தகுதியா?
மனம் கேள்வி எழுப்பி
என்னை யாசகமிட தடுத்தது.

மீண்டும்............விரல்கள்
சட்டைப்பையில்...........

”அண்ணே..
நீங்க கொடுத்த
இந்த வடையே போதும்”
போதும் என்ற
மனமுள்ள
ஏழை சிறுவனின்
அந்த சொற்கள்
அந்த நொடியில்
பணமுள்ள
என்னை பிச்சைக்காரனாக......
உருமாற்றியது...!


நூறு ரூபாய் தாளிலிருந்த
காந்தி தாத்தாவின் சிரிப்பு
அமானுஷ்ய சத்தத்தில்
என்னை
தலைகுனிய வைத்தது...!


---------------------------------------------------

-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (18-Nov-14, 1:57 am)
பார்வை : 313

மேலே