மணமாகாத மல்லிகைப்பூ

பெண்பார்க்க வரும்
பிள்ளைகளுக்கு
தேநீர் கொடுப்பதில்
தேவதையானாள்!
பேச்சு முறிந்தபின்
தீயில் போட்ட
பூவிதையானாள்!

வரதட்சணை என்ற
வார்த்தையை
உச்சரிக்கும்போது
இந்த ஆனந்ததீபம்
அணைவதுபோல் ஆடும்!

நிச்சயதார்த்தம்கூட
இந்த நெஞ்சுக்கு
நெருஞ்சி முள்தான்!

தங்கத்தின் மீதே
தங்கம் பூட்டி
தாரைவார்க்கச் சொன்னால்
அது
பங்கத்தின் பங்கு இல்லையா!

பணம் கேட்டு
பறிப்பதால்
சில பூக்கள்
மாலையாகமலேயே
மடிந்து விடுகின்றன!

அம்மி மிதித்தும்
அச்சாணி என்று
ஆராதிக்கப்பட்டவள்
புகுந்த வீட்டில்
பெருச்சாளியென்று
பேசப்படுகிறாள்!

இவள்
மாப்பிள்ளைக்கு விருந்து
ஆனால்...மாமியார்தான்
இவள் பருந்து!

எத்தனையோ பால்நிலவுக்கு
இன்னும்
பரிசம் கிடைக்கவில்லை!

பருவச சிறையிருக்கும்
இந்தப் பத்தினி
கருவறை
காவல் காக்கும் ராணி!

இந்த சுந்தரக் கிளிக்கு
ஜோசியம் பார்க்க
சுதந்திரம் உண்டு
ஆனால்...
இல்லற வாழ்க்கையோ
இதயச் சிறையில்தான்!

இன்றைய கண்ணகி
கூலிவேலை செய்து
கொலுசு வாங்கினால்தான்
கோவலனே கிடைப்பான்!

இந்த அழகுச்சிலை
இன்னும்
அகலிகைச் சிலைதான்!

சொந்தக் குயில்
இல்லாததால்
இந்த சோகக்குயில்
தாயாகாமல் தவிக்கும்!

ரகசியத் தீ மூட்டி
ரணத்தைக் கொளுத்தும்
ராத்ரிகள்!

நீரில் குளிக்கும்
இந்தத் .தாமரையின்
நெஞ்சில்
நெருப்பு குளிக்கிறது!

மணமாகாத இவள்
பாய்மரக் கப்பல்தான்
பருவத் தீ பிடித்த
பாய் மரக்கப்பல்தான்!

இந்தக் குத்துவிளக்கு
குத்துபடும் விளக்காய்
குடியேற விரும்பவில்லையோ!

வீணையாயப் புகுந்து
விறகாய் வீடுதிரும்ப
வெறுப்போ!

சோலைவனமாய்
சொர்கதிற்குச் சென்றவள்
பாலைவனமாய்
பழைய வீடு திரும்ப
பயமோ!

பாவம் செய்யாத
இந்தப் பத்தினிக்கு
சொர்கதிலாவது
திருமணம் நிச்சயிக்கப்படுமா!

எழுதியவர் : JAYAPALAN (18-Nov-14, 10:10 am)
சேர்த்தது : ஜெயபாலன்
பார்வை : 97

மேலே