காதல் கல்லூரி
அறிந்தும் அறியாத பருவத்தில் நுழைகிறோம்
அடுத்த நிமிடம் ஒளித்து வைத்திருக்கும்
விந்தைகளுக்கு புருவமத்தியில் விழைகிறோம்
பலரை சந்திக்கிறோம் பேசுகிறோம் பழகுகிறோம்
வெகு சிலரை மட்டும் மனவேலி நுழைந்து
நமது கூட்டுக்குள் சஞ்சரிக்க அனுமதி தருகிறோம்
விருப்பு வெறுப்புக்கள் பல மடங்கு பெருக பெருக
அறிவின் முன்னிலையை அகற்றி விட்டு
மனதின் வானவில் வர்ணங்களில் சஞ்சரிக்கிறோம்
படிக்கிறோம் நிறைய பரீட்சை எழுத அமர்கிறோம்
மதிப்பெண்களின் ஊடே பிறர் நமை எடைபோட
நமது எண்ண அலைகளுக்கே உயர் மதிப்பளிக்கிறோம்
பட்டமளிப்பு உற்றோர் பெற்றோருடன் கலந்துகொண்டு
நண்பர்கள் குழாம் புகைப்படத்திற்கு சிரிக்கிறோம்
கண்ணீர் மல்க கட்டி பிடித்து பிரிவை உபசரிக்கிறோம்
கல்லூரி வாசல் கடந்து வேலை தேடிதேடி அலைகிறோம்
கல்யாணம் சம்சாரம் நடுவில் எங்கோ மௌனமாய்
ஊறிய நம்முடைய கல்லூரி பரிணாமத்தை தொலைக்கிறோம்