எனது கவிதைப் புத்தகத்தை புரட்டிப் பார்க்கிறேன் 15

அக்கினிச் சிறகுகள் 1

அக்னி குஞ்சினை
காட்டிடை பொந்திடை
வைத்தான் பாரதி

அக்னிக்கு சிறகுகள் கொடுத்து
வானில் பறக்க வைத்தான் அப்துல் கலாம்

காடும் சிவந்தது
வானும் சிவந்தது
========================================================================

கண்ணதாசனுக்கு ஒரு கவிதாஞ்சலி 2

கண்ணன் குழல் தொட்டு
கவி பாடும் இசை மன்றம்

சுவை சொட்டும் திரைக் கவிதைத்
தமிழ் பொழியும் கார் மேகம்

கவித் தென்றல் குளிர் தொட்டு
விரிந்த மலர்த்தோட்டம்

காவிரிக்குப் பின் தமிழ் கண்ட
கண்ணதாசன் எனும் கவிதைப் பிரவாகம்

========================================================================

இதழா விழியா ? 3

காதல் தொடங்குவது
இதழிலா
விழியிலா
கண்ணிற்கும் உதட்டிற்கும்
இடையே ஒரு பட்டிமன்றம்
இதயம் தீர்ப்புச்
சொன்னது
இதயத்தில்தான்

விழியும் இதழும்
மூடிக்கொண்டது
இதயம் மெல்லத்திறந்து
சிரித்தது

தீர்ப்பு சரிதானே
நான் அவளிடம் கேட்டேன்

விழி திறந்தது
நாணத்தில்
இதழ் மலர்ந்தது
புன்னகையில்
========================================================================

திரைக் கவிதை 4

இசை ஒப்பனை செய்து
இலக்கியம்
உலா வரும்
எழில் வீதி
=======================================================================

மௌனத்தின் முப்புறங்கள் 5

காதலின் ஆரம்பத்தில்
மௌனம்
அழகு
இடையில் வந்தால்
வேதனை
தொடர்ந்தால்
சோகம்
========================================================================

நட்பு 6

ஒப்புக்கு சிரித்து
உதட்டளவில்
உறவாடி
கை குலுக்கி வரவேற்று
போலி புன்னகையில்
கை அசைத்து விடைபெறும்
உறவெல்லாம்
உண்மை நட்பல்ல

உள்ளத்தோடு உறவாடி
உகுக்கும் கண்ணீர்
துடைத்து
சுகத்தையும் சோகத்தையும்
பகிர்ந்து
கண்ணருகில் நிழலாக
கைபிடித்து வரும் துணையாக
காலமெல்லாம்
உடன் நடந்து வருபவனே
உண்மை நண்பன்
உயிர் நண்பன்
அதுவே நட்பு
========================================================================

கண்களின் இரண்டு வேடம் 7

கண்கள் சொன்ன
கவிதையில்
கனவில் நடந்தேன்

கண்களின் பொய்யில்
கண்ணீரில்
மிதக்கிறேன்
========================================================================

மேன்மையே நின் பெயர் தென்றலோ 8

மென்மையே நின் பெயர் தென்றலோ
நீ வீசினால் வசந்தமோ

வானமே உந்தன் பெயர் நீலமோ
நிலவுடன் உனக்கு என்ன காதலோ

காதலே உன் பெயர்தான் மௌனமோ
அந்த மௌனத்தின் அர்த்தங்கள் என்னவோ

சொல்லிவிட்டால் கொஞ்சம்
கவிதையில் எழுதுவேன்

========================================================================

சிறகடிக்க சித்திர செவ்வானம் உண்டு 9

சிந்தனை சிறகுண்டு
சிறகடிக்க சித்திர செவ்வானம் உண்டு

அந்தி மாலையுண்டு
பொழியும் அழகிய நிலவுண்டு

தென்றல் காற்றுண்டு
தெவிட்டாத தேன்தமிழ் பாட்டுண்டு

இளவேனிற் பொழுதுண்டு
இளைப்பாற உன் விழியின் நிழல் உண்டு

என் அருகில் நீ இருக்கையிலே
வானத்து சொக்கமும் எனக்கு ஏதுக்கடி

உன் மடியில் கிடந்து இறந்து விட்டாலும்
எனக்கு அதுதான் சொர்கமடி
========================================================================

இரயில் பயணம் ஒரு நாவல் 10

இரயில் பயணத்தில்
மறந்து விட்டுச் சென்ற
நாவலுடன்
அவள் முகவரியில் நின்றேன்

நாவலை திருப்பித் தரவா
பறந்து வந்தாய் என்றாள்

திருப்பிப் பார்க்க
என்றேன்

புரிந்து புன்னகைத்தாள்

இரயில் பயணம்
வாழ்க்கைப் பயணமாக
தொடர்ந்தது
தொடர்கிறது

ஆதாமுக்கு ஆப்பிள்
எனக்கு நாவல்
உங்களுக்கு வேறொன்று
நெஞ்சில் ஓவியம்
வரைவோர்க்கே
இந்தக் கலை சாத்தியம்
=======================================================================
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-14, 7:08 pm)
பார்வை : 88

மேலே