பறவைக் கூடு-கருணா

மதிய வெயில் சுட்டெரிக்கும் நேரம் .

தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை சின்னான் பார்த்துக் கொண்டிருந்தான் மரத்தின் அடியில் உள்ள பாறையில் அமர்ந்துகொண்டு. கையில் ஒரு ஒட்டு மாங்காயை வைத்து கடித்துக் கொண்டு ஒரு காலை தொங்கவிட்டபடி இன்னொரு காலை ஆட்டிக்கொண்டிருந்தான்.

வயற்காட்டில் நிசப்தம். தூரத்தில் படியாட்கள் நாற்றுகளை பறித்து குவியல் குவியல்களாக சேர்த்துக் கொண்டிருந்தனர். வரப்புகளுக்கிடையில் சல சல என்று தெளிந்த நீர் ஓடிக் கொண்டிருந்தது..

சின்னானுக்கு தூக்கம் வருவது போலிருக்கவே, மரத்திலிருந்து இறங்கி மாடுகளை நோக்கி நடந்தான்.

அப்போது அவனது தம்பி சோலை மூச்சிரைக்க ஓடி வந்தான்.

"சின்னா.. நான் மாடுகள கூடி வரேன். ஒன்ன ஆத்தா ஒடனே வர சொல்லுச்சி.."
"ஏண்டா.."
"யாரோ ஊர்லருந்து ரெண்டு பேரு ..ஆம்பிளயாளும் பொம்பிளயுமா.. வந்திருக்காங்கடா.."

சின்னானுக்கு ஒன்றும் புரியாமல் நடையை எட்டி போட்டு அவனது வீட்டை அடைந்தான்.

"வாடாப்பா..இதான் ...சின்னான்.." என்ற அம்மாவை புரியாமல் பார்த்த சின்னான் வந்திருந்தவர்களை நோட்டமிட்டபடி மூலையில் கிடந்த கருங்கல்லில் போய் உட்கார்ந்தான்.

வந்தவர்தான் பேசினார்.

"சின்னான்.. நாங்க பக்கத்துல வளவனூர்லர்ந்து வர்றோம்.எங்க பொண்ணு தாயம்மாவுக்கு ஒன்ன கேக்க அம்மாவ பாத்து பேசிட்டு போலாம்னு வந்தோம்பா.."

"அம்மாவும் சரின்னுடுச்சி.. இருந்தாலும் ஒன் மொகத்த பாத்து போலாம்னு தான்.."

"ஏங்க..நா வேல வெட்டி ஏதும் இல்லாத பய.." இழுத்தான் சின்னான்..

"அதெல்லாம் அம்மா சொல்லுச்சி. இருக்கற தோப்பையும் நெலத்தையும் நீங்க அண்ணன்தம்பி பாத்துக்கிட்டா அதவிட என்னப்பா வேணும்.. அப்போ நாங்க வரோம்மா .."
என்று எழுந்தார் சாமிநாதன் ..அவர் பேராம்..!

அடுத்த இரண்டு வாரத்தில கலியாணமாம்..திரௌபதி அம்மன் கோயிலில் .. சின்ன பசங்கல்லாம் சப்தமாக கூச்சலிட்டபடி மண் தூசி கிளப்பியபடி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

சின்னான்..

ஒரு கால் விந்தி விந்தி நடப்பவன்..கட்டையை வைத்துக் கொண்டு.. இளம் பிள்ளை வாதம் செய்த கோலம்..அப்பாவி..! உபகாரம்னு யார் வந்து எதுவும் கேட்டு இல்லைன்னு சொல்லி அனுப்பாதவன்.. உள்ளாடைகளை தவிர போட்டிருக்கும் சட்டை வேட்டியைக் கூட கழட்டி தர வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதையும் தருபவன்.

தன்னை விட ஐந்து வயது சிறிய தம்பியை டவுனில் படிக்க வைத்து அழகு பார்ப்பவன்.. அப்பாவின் மரணத்திற்கு பிறகு அம்மாவே உயிர் என்று வாழ்ந்து வருபவன் . இருபத்திநாலு வயது வரைக்கும் எப்படியோ ஒட்டி விட்டான்.. கலியாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு.. வருபவள் அம்மாவை நோகடிச்சா வெட்டிவிடுவேன் ...அதனால் எதுக்கு கலியாணம் ..காட்சியெல்லாம் என்று வாழ்பவன்.

போன வாரம் வீட்டில் அவனுக்கும் அம்மாவிற்கும் நடந்த வாக்கு வாதத்தில் அம்மாதான் ஜெயித்தாள். எப்படியோ அம்மாவின் ஆசைப்படி எல்லாம் நடந்தால் சரி.. என்ற முடிவுக்கு வந்தான் சின்னான்.

அதற்கு பிறகு திரௌபதை அம்மன் கோயில் தீ மிதிக்கு போய் வந்த அம்மா யாரிடமோ சொல்லி இவர்களை வர சொல்லியிருக்கிறாள்.

அம்மா எவ்வளவோ சொல்லியும் " பொண்ண நான் என்னம்மா பார்க்குறது.. எல்லாம் நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்.." என்று பெண் பார்க்கவும் வேண்டியதில்லை என்று பிடிவாதமாக மறுத்து விட்டான்.

அதற்கு மேல் வற்புறுத்த முடியாததால் பெண் வீட்டாரும் மேற்கொண்டு ஆக வேண்டிய சுப காரியங்களை பார்க்கத் தொடங்கினார்கள்.

முதலிரவு..

உள்ளே வந்த தாயம்மா 'அத்தையும் தம்பியும் அம்மன் கோயில்ல கூத்து பாக்க போயிட்டாங்க"ன்னு சொல்லும் போதே குறுக்கிட்டான் சின்னான் .

" ஏன் தாயம்மா.. நீ கூட போயிருக்கலாமில்ல.."
"ப்ச்..'
"தாயம்மா ...ஒன்கிட்ட ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டியே"
"ம்..ஹூம்"
"எங்க அம்மாவோட எப்பவும் எந்த சண்டையும் போடா மாட்டேன்னு சத்தியம் செய்வியா.."
"எதுக்கு சண்டைல்லாம் போடப் போறேன்..நாம தனியா களத்து மேட்டு பக்கத்துல இருக்க வீட்டுலதான இருக்கப் போறோம்னு சொன்னங்க"

"எவன்டீ சொன்னது.."
அந்த ராத்திரியில் அவன் குரல் தனித்து ஓங்கி ஆங்காரமாய் ஒலித்ததில் சப்த நாடியும் அடங்கிப் போனது தாயம்மாவுக்கு ..
"இல்ல.."
"ஏய்..எவன் சொல்லியிருந்தாலும் எனக்கு கவலை இல்ல.நீ அந்த நெனப்புல ஏன் பக்கத்தில கூட வந்துடாதே'ன்னு சொல்லி விட்டு திரும்பி படுத்துக் கொண்டு கண்களில் நீர் வழிய வழிய தேம்பினான்..

"ஏய் தாயம்மா.. கோவிச்சுக்காத ...ஒனக்கு தெரியாது.. எங்க அப்பா செத்ததுக்கப்புறம் ..எங்க அம்மா களத்து மேட்டுல தெனக்கூலி வேல செஞ்சு எங்க வயத்த கழுவ பட்ட பாடு மட்டுமில்ல.. எட்டு வயசுலயும் நடக்க முடியாத என்ன தோள்லயும் ஏன் தம்பிய இடுப்பிலயும் தூக்கிக்கிட்டு ஒரு நாளக்கி எட்டும் எட்டும் பதினாறு மைல் நடந்து ஓடா தேஞ்சவ..இன்னக்கி கண்ணியமா கொஞ்சம் நெலம் வாங்கி கடனுக்குத்தான்.. கஞ்சி குடிக்கிறோம்னா அது அந்த புண்ணியவதியால்தான் தெரியுமா ஒனக்கு .." என்று சொல்லி விசும்பியபடி தாயம்மாளின் தோளில் சாய்ந்தான்.

"தோ பாரு..ஆம்பிள அழுவாத..எனக்கு எல்லாத்தையும் எங்கப்பா சொல்லுச்சி.. எங்க அம்மா கூட எனக்கு எவ்வளவோ சொல்லி அனுப்பி வச்சது.."


"அப்புறம் ஏன் தாயம்மா ..அந்த மாதிரி பேசின..எவன் சொன்னான்..நாம தனியா இருக்கப் போறோம்னு"

தாயம்மா புன்னகைத்தாள்.

"ம்..அது..அத்தைதான் சொன்னாங்க .."
"எங்க அம்மாவா?"
"ம்..கலியாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்ன தாலி வாங்கிட்டு வரும் போது எங்க ஊட்டுக்கு வந்தாங்க..அப்பா என்கிட்டே இத சொல்லிட்டு..எம் புள்ள முடியாதுன்னு சொல்வாம்மா..நீ புரிஞ்சிக்கோ..அவன் என்கூட இருந்தா ..பெண்டாட்டி நீ.. எங்க அம்மாவுக்கு இந்த வேல செய்யல..அந்த வேல செய்யலன்னு ஆரம்பிச்சு அப்புறமா எங்க போயி நிப்பான்னு தெரியாது..பயித்தியக்கார புள்ள..ன்னு சொன்னாங்க .."

"அப்புறம்"

'நான் கறாரா சொல்லிட்டேன் ..அத்தை .. ஒங்க கஷ்டத்தையெல்லாம் அப்பா சொல்லுச்சி.. ஒங்க புள்ளையோட பாசத்தைப் பத்தியும் சொல்லிச்சு.. இந்த குருவிக் கூட்ட கலைக்கறதுக்கு நா வரமாட்டேன்..இன்னிலருந்து நீங்க தான் எனக்கு அம்மா..இப்பிடி இனிமே பேசாதீங்கன்னு அவங்ககால்ல விழுந்து அழுதேன்..
அப்புறந்தான் அத்தை கெளம்பினாங்க.."

"தாயம்மா.."

இன்னொரு தாயாக வந்தவள் மடியில் தலை வைத்து விம்மினான்..சின்னான்!

அந்த கூட்டில் ஆனந்தமே நிறைந்தது!

எழுதியவர் : கருணா (25-Nov-14, 6:10 pm)
Tanglish : paravaik koodu
பார்வை : 279

மேலே