எழுதும் கவிதை என்ன--அஹமது அலி---
இணையாக நீண்டு கிடக்கும்
இரு தண்டவாளங்கள்
இடைவிடாமல்
எழுதும் கவிதை என்ன..?
இரவோடு இரவாக
மெளன மொழியில்
தனிமை நிழலில்
நிலவெழுதும் கவிதை என்ன..?
உருவற்று சுற்றி
உயிர் காற்று
உடல் தீண்டி உயிர் தூண்டி
எழுதும் கவிதை என்ன..?
பொட்டல் வெளியில்
உச்சி வெயிலில்
தன்னந்தனியான ஒற்றை மரம்
எழுதும் கவிதை என்ன..?
பச்சை மலையை
மிச்சமில்லாமல்
போர்த்திக் கொண்ட மேகம்
எழுதும் கவிதை என்ன..?
கதிர் அறுப்புக்குப் பின்
கலையிழந்து போகும்
வயல்காடுகள் வெறுமையில்
எழுதும் கவிதை என்ன..?
காளான் குடையின் கீழ்
நனையாமல் நின்றிருக்கும்
தும்பிகள் மீசையில்
எழுதும் கவிதை என்ன..?
ஓடை நீரில்
ஓடும் சருகு
ஓட்டத்தின் வாட்டத்தில்
எழுதும் கவிதை என்ன..?
சாலையின் மீது
பிச்சைக்கார பிக்காசோ வரைந்த
ஓவியம் மீது விழுந்த சில்லறைகள்
எழுதும் கவிதை என்ன..?
மழை விட்ட பின்னும்
கூரையில் சொட்டும்
சொட்டுநீர் சொட்டிச் சொட்டி
எழுதும் கவிதை என்ன..?
மாட்டின் முதுகில்
காகம் செய்யும் சவாரியில்
மாட்டின் வால் சாட்டையாய் மாறி
எழுதும் கவிதை என்ன.?
காண்பவை யாவும்
ரசனைக்கு ரசம் பூச
அதில் பிரதிபலிக்கும் பிம்பம்
எழுதும் கவிதை என்ன..?