பிழையின்றி தமிழ் எழுதிப் படிப்போம்
இனிய தமிழ் மொழியில் மாணவர்களுக்குப் பெரும்பாலும் ஏற்படும் ஐயங்களும், அவற்றினைப் போக்கும் வழிமுறைகள் சிலவும்.
வழங்குபவர் திருமதி ஜீ.எஸ்.விஜயலக்ஷ்மி
தமிழாசிரியை
கோவை 22.
கைப்பேசி எண் 98432 97197
முதலாவதாக குறில் நெடிலில் ஏற்படும் ஐயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
சுழிகளில்(குறியீடுகளில்) ஏற்படும் ஐயங்கள்:
முதற்கண் தமிழ் மொழியில் எத்தனை சுழிகள் உள்ளன, அவற்றை எவ்வாறு கூறவேண்டும் என்பதனைக் காணலாம்.
கெ – இதில் ‘க’ என்ற எழுத்திற்கு முன்பாக உள்ள சுழி ஒற்றைக் கொம்பு என அழைக்கப் படும்.
கே - இதில் ‘க’ என்ற எழுத்திற்கு முன்பாக உள்ள சுழி இரட்டைக் கொம்பு என அழைக்கப் படும்.
கை - இதில் ‘க’ என்ற எழுத்திற்கு முன்பாக உள்ள சுழி இணைக் கொம்பு என அழைக்கப் படும்.
கா - இதில் ‘க’ என்ற எழுத்திற்கு பின்பாக உள்ள சுழி துணைக்கால் என அழைக்கப்படும்.
கி – இதில் ‘க’ என்ற எழுத்திற்கு மேலே இடப்பட்டுள்ள சுழி குறில் ‘இ’ ஓசையைக் குறிப்பதாகும்.
கீ - இதில் ‘க’ என்ற எழுத்திற்கு மேலே இடப்பட்டுள்ள சுழி நெடில் ‘ஈ’ ஓசையைக் குறிப்பதாகும்.
பு - இதில் ‘ப’ என்ற எழுத்திற்கு கீழே இடப்பட்டுள்ள சுழி குறில் ‘உ’ ஓசையைக் குறிப்பதாகும்.
பூ - இதில் ‘ப’ என்ற எழுத்திற்கு கீழே இடப்பட்டுள்ள சுழி நெடில் ‘ஊ’ ஓசையைக் குறிப்பதாகும்.
அடுத்து எந்தெந்த சுழிகளை எங்கெங்கு எவ்வாறு கையாள வேண்டும் என்பதனைக் காணலாம்.
முன்னதாகக் குறில், நெடில்களை அடையாளம் காணும் வழிமுறைகளைப் பற்றிக் காண்போம்.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டனுள் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் என்று அழைக்கப் படும். அதனுடன் இணைந்து வரும் மெய் எழுத்துகளும் குறில் என்றே அழைக்கப்படும். எடுத்துக்காட்டு (க்+அ=க.......முதல் ன்+ஒ= னொ வரை )
அடுத்து உயிர் எழுத்துகள் பன்னிரண்டனுள் ஆ, ஈ, ஊ, ஈ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் நெடில் என்று அழைக்கப் படும். அதனுடன் இணைந்து வரும் மெய் எழுத்துகளும் நெடில் என்றே அழைக்கப்படும். எடுத்துக்காட்டு (க்+ஆ=கா.......முதல் ன்+ஔ= னௌ வரை )
இத்தகைய குறில் நெடில் வேறுபாடுகளிலும், மேற்கூறிய சுழிகளிலுமே பெரும்பான்மையினருக்கு ஐயம் ஏற்படுகின்றன. இனி அவற்றைப் போக்கும் வழிகளைக் காணலாம்.
1. குறில் ‘அ’ உடன் சேர்ந்து வரும் மெய் எழுத்துகள் எந்த மாற்றமும் இன்றி வழங்கப்படும். ( அ ஓசை பெற்று வரும் எழுத்து ) எடுத்துக் காட்டு: க,ங,ச,ஞ,........ முதலியன. எடுத்துக்காட்டுச் சொற்கள் சில: (கப்பல், சக்கரம், மரம், படம்)
2. நெடில் ‘ஆ’ உடன் சேர்ந்து வரும் மெய் எழுத்துகள் (ஆ ஓசை பெற்று வரும் எழுத்துகள்) அதன் அருகில் துணைக்கால் மட்டும் பெற்று எழுதப்படும். (எடு.கா): கா,ஙா,சா,ஞா......முதலியன. எடுத்துக்காட்டுச் சொற்கள் சில: (காவலன், சாதனை, தாமரை, நாமகள்)
3. குறில் ‘இ’ உடன் சேர்ந்து வரும் மெய் எழுத்துக்கள் மேல் சுழி மட்டும் பெற்று வரும். (இ ஓசை பெற்று வரும் எழுத்துக்கள்) (எ.கா) கி, ஙி, சி, ஞி.......முதலியன. எடுத்துக்காட்டுச் சொற்கள் சில: (கிணறு, சிந்தனை, திலகம், நினைவு)
4. நெடில் ‘ஈ’ உடன் சேர்ந்து வரும் மெய் எழுத்துக்கள் மேல் சுழிவட்டம் மட்டும் பெற்று வரும். (ஈ ஓசை பெற்று வரும் எழுத்துக்கள்) (எ.கா) கீ, ஙீ, சீ, ஞீ.......முதலியன. எடுத்துக்காட்டுச் சொற்கள் சில: (கீரி ,சீரகம், தீபம், நீலம்.......முதலியன.)
5. ‘உ’ சுழிகள் அனைத்தும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டவை. அவை அனைத்தும் மேற்கூறியவை போன்று ஒன்று போல் அமையாதவை. அவற்றைப் பற்றிக் காணலாம்.
• கு, டு, மு, ரு, ழு, ளு ஆகிய எழுத்துகள் மேல் நோக்கிய வளைவுகளையும்,
• ஙு, சு, பு, யு, வு ஆகிய எழுத்துகள் கீழ் நோக்கிய சிறுகோடுகளையும்,
• ஞு, ணு, து, லு, று, னு ஆகிய எழுத்துகள் கீழ் நோக்கிய சிறுவளைவு மற்றும் மேல் நோக்கிய சிறுகோட்டுடனும் காணப்படும்.
• ஆனால், இவையே நெடில் வடிவம் பெறும் பொழுது, பின்வரும் மாற்றங்களைப் பெற்று அமையும். அவை முறையே,
• கூ, சூ, டூ, மூ, ரூ, ளூ என்ற எழுத்துக்கள் மேற்கூறிய வடிவினையும்,
• ஙூ, வூ, யூ, பூ போன்ற எழுத்துகள் மேற்கூறிய வடிவினையும்,
• ஞூ, ணூ, தூ, நூ, லூ, றூ, னூ போன்ற எழுத்துகள் மேற்கூறிய வடிவினையும் பெற்று அமையும். (உகர வரிசைக்கு மட்டும் இத்தகைய மற்றங்கள்) என்வே இதனை மட்டும் பலமுறை எழுதிப் பழகுதல் நயம் பயக்கும்.
6. குறில் ‘எ’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் ஒற்றைக்கொம்பு மட்டும் பெற்று வரவேண்டும். (‘எ’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கெ, ஙெ, செ, ஞெ,......... எடுத்துக் காட்டு சொற்கள்: (செவ்வானம், தென்னை, மெத்தை, வெள்ளை முதலியன.)
7. நெடில் ‘ஏ’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் இரெட்டைக்கொம்பு மட்டும் பெற்று வரவேண்டும். (‘ஏ’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கே, ஙே, சே, ஞே,......... எடுத்துக் காட்டு சொற்கள்: (சேவல், தேனி, தேவதை, நேர்மை முதலியன.)
8. குறில் ‘ஒ’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் ஒற்றைக்கொம்பு மற்றும் துணைக்கால் பெற்று வரவேண்டும். (‘ஒ’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கொ, ஙொ, சொ, ஞொ, ......... எடுத்துக் காட்டு சொற்கள்: (பொம்மை, கொக்கு, தொப்பி, தொலைக்காட்சி முதலியன.)
9. நெடில் ‘ஓ’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் இரெட்டைக்கொம்பு மற்றும் துணக்காலும் பெற்று வரவேண்டும். (‘ஓ’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கோ, ஙோ, சோ, ஞோ,......... எடுத்துக் காட்டு சொற்கள்: (கோவில், தோட்டம், சோலை, நோன்பு முதலியன.)
10. நெடில் ‘ஒள’ உடன் இணைந்து வரும் மெய் எழுத்துக்கள் ஒற்றைக்கொம்பு மற்றும் ‘ள’வும் பெற்று வரவேண்டும். (‘ஒள’ ஓசைப் பெற்று வரும் சொற்கள்.) எடுத்துக்காட்டு: கௌ, ஙௌ, சௌ, ஞௌ........ எடுத்துக் காட்டு சொற்கள்: கௌதாரி, பௌர்ணமி, வௌவால், சௌடாம்பிகை முதலியன.
*************************************************************************************
II அடுத்து நாம் காண இருப்பது
‘ல’கர, ‘ள’கர, ‘ழ’கர வேறுபாடுகள்:
‘ல’ இதனை நுனி நா லகரம் என்று கூறி பயில வேண்டும்.
‘ள’ இதனைப் பொது ளகரம் என்று கூறி பயில வேண்டும்.
‘ழ’ இதனைச் சிறப்பு ழகரம் என்று கூறி பயில வேண்டும்.
குறிப்பு:
தமிழ் மொழியில் குறில் எழுத்துகளுடன் கரம் சேர்த்து கூறுவது வழக்கம். சான்றாக: அகரம், இகரம், பகரம், தகரம் என்று.
அதே போன்று நெடில் எழுத்துகளுன் காரம் சேர்த்து கூறுவது வழக்கம். சான்றாக: ஆகாரம், ஈகாரம், ஓகாரம், ஐகாரம் என்று.
இனி மேலே குறிப்பிட்ட அனைத்து ‘ல’கர, ‘ள’கர, ‘ழ’கரங்களும் பயின்று வரும் சில சொற்றொடர்களைச் சான்றுகளாக் காணலாம்.
1. தொழிலாளர்கள் வேலை செய்தனர்.
2. தமிழ் மொழி பேசுபவர்கள் உலகெங்கும் உள்ளனர்.
3. கயல்விழி கல்வியில் முதல் மதிப்பெண் பெற்றாள்.
4. பலாப்பழம் பள்ளத்தில் விழுந்தது.
5. வாழையிலையில் உணவு சாப்பிட்டாள்.
6. பழங்கால மனிதர்கள் சிறப்பு வாய்ந்தவர்கள்.
7. தொழிலில் லாபம் கண்டாள்.
8. கரிகாலச் சோழன் கல்லணைக் கட்டி விளை நிலம் ஏற்படுத்தினான்.
9. இன்று உலகம் முழுவதும் மகளிர் தினவிழா கொண்டாடப் படுகின்றன.
10. உலகில் உள்ள வளங்கள் அனைத்தும் உயிர் வாழத் தேவை .
11. கலா பவிழம் நகைக் கடைக்குச் சென்றாள்.
12. மாலதி சாந்தியை அதிகாலையில் எழுப்பினாள்.
13. பள்ளி நுழை வாயிலில் மாணவர்கள் நின்றிருந்தனர்.
14. அம்மா குழந்தைக்குப் பாலும் பழமும் கலந்த உணவைக் கொடுத்தாள்.
15. தொழிலின் மூலம் முன்னேற்றம் கண்டாள்.
16. தோழிமலை நாஞ்சில் நாட்டு வேள்வி மலை அம்மே.
17. நாளை எங்கள் பள்ளியில் சுதந்திர தினவிழா.
18. ஷாலினி கொய்யாப் பழம் கீழே விழும் என்று எதிர்பார்த்தாள்.
19. பல்லி பள்ளத்தில் விழவில்லை.
20. மழலைக் கல்வியை மக்கள் அனைவரும் ஆதரித்தனர்.
21. மழலையர்கள் அழகானவர்.
22. வேளாண்மைத் தொழில் பற்றிய கலந்துரையாடல் நேற்று நடந்தது.
23. தமிழ் நாட்டில் மக்கள்த் தொகை அதிகம்.
24. தமிழ் நாட்டில் எண்ணற்ற பல்கலைக் கழகங்கள் உள்ளன்.
25. நாங்கள் அனைவரும் தமிழர் என்பதில் பெருமையடைகின்றோம்.
*****************************************************************************
III அடுத்து நாம் காண இருப்பது ரகர றகர வேறுபாடுகள்:
1. ‘ர’ இதனை இடையின ரகரம் என்று பயிலவேண்டும். (ஏனெனில் இது ‘ய்,ர்,ல்,வ்,ழ்,ள்’ என்ற இடையின மெய் எழுத்துக்களுள் வருவதனால்:).
2. ‘ற’ இதனை ‘வல்லின றகரம்’ என்று பயிலவேண்டும். (ஏனெனில் இது ‘க்,ச்,ட்,த்,ப்,ற்’ என்ற வல்லின மெய் எழுத்துக்களுள் வருவதனால்:).
இனி மேற்கூறிய ரகர, றகர மெய்கள் பயின்று வந்துள்ள சில சொற்றொடர்களைக் காணலாம்.
1. மலைமேல் மர உருளு உருளுகின்றது.
2. அரம் கூர்மையானது.
3. பயிர் செழிக்க உரம் ஏற்றது.
4. கரிகால் பெருவளத்தான் வல்லரசன்.
5. மாரி ஈகை மற்போர் மலையன்.
6. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
7. உறுதியான உள்ளத்தை உரம் போன்றதென்பர்.
8. வெற்றி வேற்கை என்ற நூல் அதிவீர்ராம பாண்டியன் என்ற மன்னரால் இயற்றப் பட்டது.
9. பரிசு பெற்றவன் பாராட்டப் பட்டான்
10. இடையறாத முயற்சி வெற்றிபெற உதவும்.
11. உரம் தாவரத்திற்கு நல்லது.
12. கருத்தில் உதிப்பவையே செயலாக்கம் பெறுகின்றது.
13. கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
14. போரில் சரமாரியாக அம்பு எய்தினான்.
15. பலப்பரிட்சை பரிசிற்கு உகந்த்தல்ல.
16. திருப்புமுனை வேண்டின் திறம்பட செயல்லாற்ற வேண்டும்.
17. கரை புரண்ட கருணை அருளாளற்கே உரியது.
18. இறைவன் தன்னருள் வழங்குவான்.
19. இருள் சேர்ந்த வாழ்வு அருளாளற்கு இல்லை.
20. பறவைகள் சரணாலயத்தைப் பாதுகாத்தல் அவசியம்.
21. திருவருட் செல்வர்கள் உயிர்களிடத்து கருணைக் காட்டுவார்கள்.
22. வாரி வழங்கும் தன்மை வள்ளல்களுக்கே உரியது.
23. ஏற்றப் பாட்டு நாட்டுப் புறப் பாடல்களுள் ஒன்று.
24. கற்பனைக் கனிரசம் மிக்கது கவிதைகள்.
25. சொற்சுவை பொருட்சுவை நிறைந்த்து தமிழ் மொழி
*******************************************************************
Iv அடுத்து நாம் காண இருப்பது நகர, ணகர, னகர வேறுபாடுகள்:
1. ‘ண’ இதனைத் டண்ணகரம் என்று கூறி பயிலவேண்டும். ஏனெனில் இது மெய்யெழுத்து வரிசையில் டகர மெய்யை அடுத்து வருவதால். (ட, ண.. என்று.)
2. ‘ந’ இதனைத் தந்நகரம் என்று கூறி பயிலவேண்டும். ஏனெனில் இது மெய்யெழுத்து வரிசையில் தகர மெய்யை அடுத்து வருவதால். (த, ந.. என்று.)
3. ‘ன’ இதனைத் றன்னகரம் என்று கூறி பயிலவேண்டும். ஏனெனில் இது மெய்யெழுத்து வரிசையில் தகர மெய்யை அடுத்து வருவதால். (ற,ன.. என்று.)
இனி மேற்கூறிய ணகர, நகர, னகர மெய்கள் பயின்று வந்துள்ள சில சொற்றொடர்களைக் காணலாம்.
1. நகம் நீண்டு வளரும்.
2. மனம் கமழ் மணம் பரப்பும் மலர்.
3. நம் நாடு வளம் மிக்கது.
4. உன் எண்ணம் நல்லது.
5. பணம் படைத்தவன் பலவான்.
6. நாதம் செவிக்கு இன்பம் பயக்கும்.
7. நாங்கள் மழையில் நனைந்தோம்.
8. நாட்டியக் கலையில் நடனமாதர்கள் புதுமைப் படைத்தனர்.
9. மல்லிகை மலர் நறுமணம் பரப்பும்.
10. நாகத்தில் சிறந்தது ராஜ நாகம்.
11. நேற்றுபெய்த மழையில் நிலமகள் மனம் குளிர்ந்தாள்.
12. கிணற்றில் கிண்ணம் தவறி விழுந்தது.
13. கணப்பொழுதும் வீணாக்காமல் கடமையாற்ற வேண்டும்.
14. அன்னை அன்பைப் பொழிந்து மனம் மகிழ்வாள்.
15. தந்தை தண்ணளி செய்து உயர்த்துவார்.
16. குமரன் கோட்டையில் நுழைந்து வெளியேறினான்.
17. சித்திரைத் திருநாளில் பேரணியுடன் மனங்கவர் தேரோட்டம் நடந்தது.
18. தவறு செய்தவன் தண்டனை அடைவான்.
19. வீணை இசையில் வாணி மனம் மகிழ்ந்தாள்.
20. வேணுகானம் இசைப்பான் நீல நிறக் கண்ணன்.
21. கிண்ணத்தில் வெண்ணெய் நிரம்பி இருந்தது.
22. பொன்னால் ஆன வளையலை அணிந்த பெண் மனம் மகிழ்ந்தாள்.
23. காணி நிலமாயினும் பேணுதல் வேண்டும்.
24. தனயன் கடமைத் தாய்த் தந்தையைப் பேணுதல்.
25. தமிழன் கடமை தாய் நாட்டைப் பேணுதல்.
***********************************************************************************