வாழையின் வலியும் வாழ்த்தும் -கயல்விழி

குடும்பத்தோடு கூடி
வாழ்ந்தால்
வெட்டி வந்து கட்டுகிறார்
கோயிலில்
கர்ப்பம் சுமக்கையில்
இழுத்து வந்து கட்டுகிறார் தாலியை
கட்டிய தாலியோடு பின்
வெட்டுகிறார்
தோஷம் கழிந்ததாய்
நம்புகின்றார்
எம் உடையினை கிழித்து
உணவினை படைத்து
உச்சிக்கொட்டி உண்ணுகின்றார்
பிஞ்சு தலையினை உடைத்து
சம்பலாய் சமைத்து
தலை சிறந்தது என்றே
உளறுகிறார்
உடலினை பிரித்து
உள்சதை எடுத்து
கூட்டோடு குழம்பென
சுவைக்கிறார்
வாழை எங்கள்
வாழ்வினை முடிப்பதில்
வருத்தம் இல்லை என்றாலும்
வெட்டி வீழ்த்தி அரிந்திடும்
போது வலிப்பதை
அறிந்திடு அது போதும்
உன் குலம் தழைக்க
என்குலம் அழிக்கும்
மண்ணில்வாழ் மானிடா
மரணத்தை தழுவியும்
மனதார வாழ்த்துவோம்
வாழையடி வாழையாய்
வையம் புகழ்ந்திட
வாழ்க நீ வாழ்ந்திடவே !!