கிரிக்கெட் வீரன் பிலிப் ஹியூக்ஸ்
ஆஸ்திரேலிய விளையாட்டு வீரனே !
'பிலிப் ஹியூக்ஸ் '-என்னும்
அன்புத்தம்பியே ...!
நீ
விளையாடத்தானே போனாய் ..
யுத்தத்திற்கா போனாய் ?
களத்திலேயே சுருண்டு விட்டாயே ! .
எம்மையெல்லாம்
கண்ணீர் குளத்திலேயேதள்ளிவிட்டாயே !
எத்தனையோ
ஆடுகளங்களில்
ஆடி விளையாடி
மாவீரனாய்
வரவேண்டியவன் நீ !
பொசுக்கென்று
தாய்மண்ணிலேயே
தலைசாய்த்து விட்டாயே !
காலனுக்கு உன்மீது
ஏனிந்த கொள்ளைப்பிரியம் ?
அகவை இருபத்தாறுதானே
ஆகிறது உனக்கு .
அதற்குள்
பாவியவன் உன்னை
பறித்தோடிவிட்டானே !
வெற்றி தோல்வி
யாருக்கென்று தெரியுமுன்னேயே
வாழ்க்கையில்
தோற்றுப்போய் விட்டாயே !
வாழ்க்கையில் தோற்றாலும்
வரலாற்றில் ஜெயித்து நிற்பாய் .
உனது
அன்னை- தந்தை
உற்றார் -உறவுகள்
நண்பர்கள் -சகவீரர்கள்...
உன்னைஅறியாமல் வீழ்த்தி
அழுதுபுலம்பிக் கொண்டிருக்கும்
அன்புநண்பன் 'சீன் அப்போட்'..
இவர்களோடு
நாங்களும்தான்
உன்னை
நீ
பிறந்த இந்நாளில்
பெருமையுடன் நினைக்கின்றோம்.
செம்மின்னல் மின்னும்
உன்
பால்வழியும்பூமுகத்தை
எம்மால் எப்படிமறக்கமுடியும்?
ஆடுகளமும்
போர்க்களமும்
ஒன்றுதான் என்பதை
நீ
நிரூபித்ததோடு நிற்கட்டும்.
நீ
வீரன்தான் ..மாவீரன்தான் !
இன்னொருவீரனுக்கு
இந்தநிலை வரவேண்டாம் !
'கிரிக்கெட் 'உலகம்
உன்பெயரை
இனி எப்போதும்
எச்சரிக்கைக்காக
உச்சரித்துக் கொண்டேயிருக்கும் !