தலைப்பைத் தேடும் கவிதை

மனதை வருடும் நின் நினைவுகள்
அசையாமல் ஊடுருகிறதே
வேர் நுனி முதல் உயிர்வரை ....
ஒவ்வொரு உயிரெழுத்திலும்
உன் பெயர் தேடும் திசைதான்
தேடுகிறேன் எப்போதும்
எதுவோ...?என்ன சொல்ல...
என்ன பேச ...என்ன எழுத .....
கண்களில் பதித்த விதை
விருட்சமாகுமோ ? கருகுமோ...?
வெறும் காட்சிப் பொருளோ..?
கனவோ..?கற்பனையோ...?
மனதை நெருடும் அந்த தருணங்கள்
பட்டுப் பூச்சிகளின் சிறகில் இருந்து
எழ முடியாமல் விழமுடியாமல்
தொடும் முயற்சியில்....
பறந்து பறந்து விரிகிறதே
உதிராமல் சிக்காமல் சிறகுகளும்
உயிர் சிறகின் நுனி ஊடுருவலில்
தன் சோடியைத் தேடும் சந்தோசத்தில்....
சோடிப் புறாக்கள் ஒவ்வொன்றும்
கண்களுக்கு எட்டிய தூரம் வரை
பறந்து பறந்தே இனிய வாழ்க்கையைத் தேடும்
இன்பமான இனிய ராகம் பாடி அழைத்திடும்
மேளங்கள் தாளங்கள் இன்றியே....
நினைவுக் கடல் அசையாமல்
நீந்தி நீந்தி அசைத்துப் பார்க்கிறது
எண்ணலைகள் தொடர்கிறதே
துள்ளி ஓடும் மீன்களைப் போல்
மூழ்கி மேலெழும்பி அன்பின் ஆழம் தேடி....!
யார் விதைத்தது ....?
இங்குவாசனை மலர்களெல்லாம்
பூத்துக் குலுங்குகிறதே சந்தோசத்தில்
யாருக்காக சூடிக் கொள்ள ....
என் மனப் பறவைகளெல்லாம்
ஒன்று சேர்ந்து அன்போடு ஒன்று கூடி
பூந்தோட்டம் அமைக்கிறதே
எதற்காக யாருக்காக...?
விருட்சங்கள் எதிர்பார்க்கும்
ஒவ்வொரு வாசப் பூக்களிலும்
அமர்ந்து அமர்ந்து தேனை உறிஞ்சும்
வண்டின் ரீங்காரம் கேட்டு மயங்கித்தான்
கிடக்கின்றன வாசமில்லா மலர்களும்....
ஒவ்வொரு பூக்களும் கதை சொல்கிறதே
யார் விதைத்துப் போனார்கள்
நாம் அன்று பூத்தது போலே
இன்றும் வண்ணமும் வாசமும் மாறாமல்
பேசிக் கொள்கின்றன வண்டினங் களோடு ....!
அப்படியே அன்றும் இன்றும்
தலைப்பைத் தேடும் கவிதையாக
என் வீட்டு ரோசா யாரைத் தேடுதோ....!