என் கதை -ரகு
என் கடைசிக்கதையின்
முற்பாதியில்
அயர்ந்துவிட்டான்
கதைகேட்டு நச்சரித்த சுஜய்
நான்மட்டும்
தூக்கம் தொலைத்திருந்தேன்
கதையின்போதான
அவனின்
அறிவில் திளைத்த
அறியாக் கேள்விகளைச்
சுமந்துகொண்டு
"ஆப்பிள் மரம் எப்படிப் பேசும் ?
தூக்கித்தானே சென்றது காகம் திருடவில்லையே ?
ஊளையிடும் நரி எப்படி
குஞ்சு வாத்துக்களைக் கரைக்கழைத்தது ?"
நெருடிய நடுநிசியில்
நானொரு புதியபரிணாமக்
கதையொன்றை
தேடிக்கொண்டிருக்கிறேன்
நாளையாவது
குழந்தையின் கேள்விக்கு
விடையிருக்கட்டும்
என் கதையில் !