காற்றில் மிதக்கும் இறகு - தேடல் 4
மனிதம் புரிந்த இறகு
ஒரு நீள்சுவாசமெடுத்து
பெருமூச்செறிய....... மரணக்குழி மூடிய
மிச்சக்கடைசி மணற்கொத்துகளோடு
புதைதலுக்குத்
தப்பியிருந்தது.......
காற்றும் கதிரும்
கழுவி உலர்த்திவிட ... ஒரு
சன்னலோரப் படுக்கைதேடி
வீழ்ந்திருந்தது இறகு.......
அதனைப் போலிருந்த இலவுப்பொதிமங்களில்...
தான் உதிர்ந்திருந்த
உயிரின் அழுகையொத்த
சத்தம் கேட்ட.. இறகு...இன்னொன்றும்
கேட்டது....
அம்மா வந்துடறேன்... இங்கயே
விளையாடு...
விரல்களால் தானும்..
விரல்களைத் தானும்
சிலிர்த்தும்... நெகிழ்ந்தும்
கற்றுக்கொண்டது இறகு..... பிள்ளைமொழி..
பத்துநிமிட பரிமாற்றம்
கழிந்து... அம்மாவும் வந்திருந்தாள்
பசித்திருந்த பிள்ளைக்கான
ரொட்டித் துண்டுகளோடு...
இறகும்... இடம் பெயர்ந்திருந்தது
தலையணையடிக்கு....
அதே கதவு....
அதே... அம்மா வந்துடறேன் பொறு...
இம்முறை வந்தவன்
ரசிகனாயிருக்கலாம் என
நினைத்திருக்கக் கூடும்... அவனுக்கு
முன் அவளை வருடிப்
புணர்ந்திருந்த... இறகு.....
காமமும் கற்ற இறகு
களைத்துக் கிடக்கையில்..
மீண்டும் கேட்டவைகள்.....
இம்முறை.. கொஞ்சம்
கூடுதலாய்... பிள்ளையின் பசி..
கொஞ்சம் போட்டுக்குடேன்.. அவள்..!!
சட்டை மடித்துக்கொண்டே
சொல்லியிருந்தான் அவனும்...
உனக்கு இது போதும்
ஆளில்லாக் குறைக்கு வந்தால்
சாதிப்புத்தியக் காட்டுற....
படுக்குறதுக்கு முன்னாடி
வாசலிலயா கழட்டுன.. தாசி
வீட்டுலயும் சாதி கேக்குதாடா..
விளக்குமாரெடுத்து
வெகுண்டதில்... களைத்து
அவன் உருவியெறிந்திருந்த
ஆணுறையைப் போலவே
ஈரமாய்க் கனத்திருந்தாள்
அவளும்...
எதுவும் உணராமல்
உடைந்த பொம்மை
மல்லுக்கட்டியிருண்டது .. குழந்தை..!!
முதன்முதலாய் குரோதம்
உணர்ந்த இறகும் ..
துடிக்கத் தொடங்கியிருந்தது..
இம்முறை
காற்று சுழற்றாமலேயே.........
இந்தக் கவிதைத் தொடரின் தலைப்புக்கு உரியவரான தோழர். குமரேசன் அவர்களுக்கும் இதற்கு முன்பகுதி எழுதிய தோழர்.ஜின்னா அவர்களுக்கும் நன்றிகள்.. என்னை எழுதச் சொல்லி வாய்ப்பும் ஊக்கமும் அளித்த இருவருக்கும் நன்றி....!!