காவியத் தலைவன் இயக்கம் திரு வசந்தபாலன் திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா இரவி

காவியத் தலைவன்
இயக்கம் : திரு. வசந்தபாலன்
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
*****
சிவதாச சுவாமிகளின் நாடகக் கதையை உயிரோட்டமாக படமாக்கிய வசந்தபாலனுக்கு பாராட்டுக்கள். அங்காடித் தெரு திரைப்படத்தின் மூலம் யதார்த்த முத்திரை பதித்திட்ட இயக்குனரின் முத்தான படைப்பு.

இந்தத் திரைப்படத்தில் யாருடைய நடிப்பு உச்சம் என்றால் திரு. நாசர் அவர்களின் நடிப்பு என்றே சொல்ல வேண்டும். பாத்திரமாக மாறி விட்டார் திரு. நாசர். நல்ல நடிகர், திரைப்படம் இயக்கிய இயக்குனர் என்பதால் உணர்ந்து நடித்துள்ளார்.

ஆர்மோனிய பெட்டி காட்டவில்லை என்ற ஒரே ஒரு காரணம் சொல்லி இது நாடகக்கதை இல்லை என்று சொல்லி விட முடியாது. இயக்குனர் வசந்தபாலன் அவர்கள் இந்தக்கதை சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய கதை என்பதால் முடிந்தளவிற்கு முயற்சி செய்துள்ளார். பாராட்டுக்கள்.

நடிகர்கள் பிருத்விராஜ், சித்தார்த் இருவரில் சித்தார்த் சிவதாச சுவாமிகளின்( நாசர் )பாராட்டைப் பெற்றாலும் படம் பார்ப்பவர்களின் பாராட்டை பிருத்விராஜ் பெறுகிறார். மிகச் சிறப்பாக நடித்துள்ளார். “இன்னா செய்தாரை” திருக்குறளை நினைவூட்டும் விதமாக நண்பன் தீங்கு செய்த போதும் திருப்பி தீங்கு செய்யாமல் நன்மை செய்யும் நல்ல பாத்திரம் சித்தார்த்திற்கு வழங்கி உள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள். இயக்குனர் பொன்வண்ணன் சில காட்சிகள் வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. இசை இளையாராஜாவாக இருந்திருந்தால் இசை படத்தோடு மிகவும் ஒன்றி இருக்கும் என்பது என் கருத்து. வித்தகக் கவிஞர் பா. விஜய் எழுதிய பாடல் “யாருமில்லா தனி அரங்கில்” பாடல் மிக நன்று. பண்பலை வானொலிகளில் தினமும் ஒலிபரப்புகின்றனர். எல்லாப் பாடல்களும் கேட்கும்படி நன்றாக உள்ளன. படமாக்கிய விதமும் நன்று.

ஊடகங்களில் சில மசாலா குப்பைப் படங்களை எல்லாம் அழகோ அழகு என்று புகழ்ந்து ஓட வைத்து விடுகின்றனர். சில படங்களை உள்நோக்கத்துடன் குறைத்து மதிப்பிடுகின்றனர்.



நடிகர்கள் பிருத்விராஜ், சித்தார்த் இருவரும் பெண் வேடத்திலும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .

இந்தப்படம் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அன்று முன்னொரு காலத்தில் நாடகங்கள் எப்படி நடத்தப்பட்டன, எப்படி பயிற்றுவிக்கப்பட்டார்கள். நாடகம் நடத்துவதில் உள்ள சிரமங்கள் என அனைத்தையும் படத்தில் காட்டிய இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

தம்பி இராமையா, இயக்குனர் சிங்கம் புலி இருவரும் நகைச்சுவை காட்சிகளுக்கு வந்து திறம்பட நடித்துள்ளனர். பாராட்டுக்கள். நாசரின் மிகையில்லாத நடிப்பு படம் பார்த்து விட்டு வெளியே வந்த பிறகும் மனதில் நின்றது.

ஜெயமோகன் எழுதிய வசனம் சில இடங்களில் மட்டும் பாராட்டும்படி உள்ளன. சித்தார்த் இளவரசியை காதலிப்பதை நண்பன் பிருத்விராஜ் சொல்லி இருந்ததை நாசரிடம் சொல்லி மாட்ட வைத்து அடி மீதி வாங்கவிட்டு தீமை செய்கிறார்.

நண்பன் நொடித்து, நகை, விருதுகள் விற்று விடுகிறான். பல இடங்களில் பல நேரத்தில் தீமை செய்த போதும் அவற்றை திருப்பிக் கொண்டு வந்து நண்பன் தந்த போதே திருந்தி இருக்க வேண்டும். அப்படியும் திருந்தாமல் மனதில் வன்மம் வைத்து இருந்து ஒருதலைக்காதலி கிடைக்காத கோபத்தில் இறுதிக்காட்சியில் நண்பனை துப்பாக்கியால் சுடுவது துரோகத்தின் உச்சம். இப்படியும் சில மனித விலங்குகள் உள்ளனர் என உணர்த்தும் காட்சி.

இரண்டு குத்துப்பாட்டு, நான்கு வெட்டுக்குத்து என்று மசாலாப் படம் எடுக்காமல் நலிந்து வரும் நாடகக் கலை பற்றி திரைப்படம் எடுத்துள்ளார். திரைப்படம் தான் நாடகக்கலையை அழித்தது என்றால் மிகையன்று. திரைப்படத்தால் அழிவுக்கு உட்பட்ட நாடகத்தின் வரலாற்றை உயிரோட்டமாக திரைப்படத்தில் காட்டிய இயக்குனர் வசந்தபாலனுக்கு பாராட்டுக்கள்.

இந்த திரைப்படத்தை எதிர்மறையாக விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். அதற்காக இயக்குனர் வசந்தபாலன் மனம் தளர் வேண்டாம். தரமான படங்கள் மட்டுமே இயக்குவது என்று கொண்ட கொள்கையில் இருந்து விலகிட வேண்டாம். காவியத்தலைவன் சராசரி மசாலாப்படம் அல்ல. தீங்கு செய்த நண்பனுக்கும் நன்மை செய் ! என்று போதிக்கும் படம்.

பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கை விதைக்கும் பேய்ப்படம் எடுத்தே வெற்றிகரமாக ஓட்டி , பணம் சம்பாதித்து விடுகின்றனர். எனவே அவர்கள் போல நீங்கள் மனம் மாற வேண்டாம்.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய திரைப்படம் என்றால் தரமாக இருக்கும் என்று நம்பி போகலாம் என்று என் போன்ற ஒரு கூட்டம் உங்களுக்கு உள்ளது. அவர்களை நீங்கள் ஏமாற்றவில்லை.

திரைப்படம் நடக்கும் 2 மணி நேரமும் நம்மை மறந்து திரைக்கதையில் கரைந்து விடுகிறோம். இதுவே இயக்குனரின் வெற்றி. நாடகக்கலை வளர்க்க அந்தக்காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டம், நாடகம் பார்க்க மக்களை வரவழைக்க சாலையில் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி விளம்பரத்தாளை வழங்கிக் கொண்டே செல்வது. நாடக நடிகனுக்கு காய்ச்சல் என்றாலும், நடிக்கக் கூடாது என்று மருத்த்வர் சொன்ன போதும் , அறிவித்த நாளில் நடித்தே தீர வேண்டும் என்று ஒப்பந்தக்காரராக நடிகர் மன்சூர் அலிகான் அவருக்கே உரிய பாணியில் வசனம் பேசி நன்றாக நடித்துள்ளார்.

காவியத் தலைவன் திரைப்படத்தில் வரும் வசனங்களை திறம்பட உச்சரித்த அனைத்து நடிகர்கள் மற்றும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஒளிப்பதிவாளர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர்கள், இயக்குனர் வசந்தபாலன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (6-Dec-14, 9:15 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 139

மேலே