பூக்களுக்கும் துப்பாக்கிகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது

தென்றல் கூட
சற்று வேகமாய் வீசினால்
வாடிவிடும் இந்த மலர்கள்
சீறிப்பாயும் தோட்டாக்களை
எதிர்கொள்வது எப்படி
சாத்தியமாகும்?

கேள்விக் கணைகளால்
பறித்தெடுக்க வேண்டிய
இந்த மலர்களை
துளைக்கும் ரவைகளால்
சிதைத்திடுவது
எப்படி உத்தமமாகும் ?

புவியாளப் பிறந்த
சித்தத்தில் சிறந்த மலர்களை
புதைகுழியில் போட்டு மறைக்க
ரத்தத்தில் தோய்த்தெடுத்தது
எந்த வகையில் நியாயமாகும் ?

புத்தகங்களையே
சுமக்க முடியாத
குட்டி தேவதைகள் மீது
யுத்த வெறியைத் திணிப்பதும்
எப்படி மனிதமாகும் ?

சொல்லுக்குச் சொல்லும்
வாளுக்கு வாளும்
களத்தில் நேருக்கு நேர்
எதிர்கொள்வதும்
யுத்த தர்மமாய் இருக்கையில்
வஞ்சக நெஞ்சத்தின்
தீப்பொறியெடுத்து
பூக்களின் உயிரின் வேரில்
இறைப்பது
எந்த முறையில் புனிதமாகும் ?

தன் வன்மத்தை செலுத்துவதற்கும்
தன் வலியை உணர்த்துவதற்கும்
எழுதுகோலின்
உறுதிகூட இல்லாத
சிறுதளிர்களின் இதயம்தான்
இறுதிக் குறியீடா என்ன ?

அப்பாவிகளை
வேட்டையாடத் துணிந்த
உங்களின் இலக்கும்தான் என்ன ?
நீங்கள் வேட்டையாடி முடித்தபின்
உங்களுக்காக
மிச்சம் இருப்பதும் என்ன ?

கடவுள் கொடுத்த உங்களின்
மனமும் தொலைந்தது எங்கே ?
மானிடத்தைக் காக்கத் தவறிய
சித்தாந்தத்தின் நியதிதான் என்ன ?

உரிமை என்பதும்
தனிமனித சுதந்திரம் என்பதும்
நம் நிம்மதியான
வாழ்க்கைக்காகத்தான் என்பதை
மறந்துவிட்டால்
போராட்டத்திற்கான விடையும் எது ?

எல்லா உயிர்களையும் மடித்தபின்
உங்கள் துப்பாக்கியின் சத்தம்
ஓய்ந்து என்ன பயன் ?

உங்கள் எதிரே
எவருமே இல்லாத நிலையில்
உங்கள் துப்பாக்கியை வைத்து
என்ன செய்யப் போகிறீர்கள் ?

தூக்கி எறிந்திடுவீர்களா – அல்லது
உங்கள் பக்கமாய்
திருப்பிக் கொ[ல்]ள்வீர்களா ?

அல்லது –
மாண்டவர்களையெல்லாம்
எழுப்பி வந்து
மறுபடியும்
கொன்று குவிப்பீர்களா ?

லட்சியம் என்பதும்
போராட்டம் என்பதும்
மானிடத்தை
உயர்த்தவும் வாழவைக்கவும்தான்
ஒரு நொடியில்
சுட்டுப் பொசுக்குவற்கு அல்ல.

எழுதியவர் : ரத்தினமூர்த்தி (18-Dec-14, 2:00 pm)
பார்வை : 202

மேலே