மறந்து போனது மலராக
மதிவளர்க்கும் என்றெண்ணி
மண்டையில் ஏற்றி
அதிவிரைவில் அழியுமுன்னே
தாளில் மாற்றி
மதிப்பெண்கள் பெற்றகணம்
மறையும் கூற்றை
விதிவெல்லும் செயலேன்றோர்
விளக்கம் சொல்வார்.
பலர்கூட பாராட்டும்
பதக்கம் வாங்கி
சிந்தனையைச் சிதரவிட்டுச்
சிறப்பென் றேங்கி
முந்தானை, முறுக்குமீசை
முனகல் பேசி
விந்தழியும் காமமதில்
விழுந்தே நோவார்
உணவிருந்தும் உடையிருந்தும்
உறக்கம் போக்கி
பணம்பெருக்கும் தந்திரத்தை
பழக்கம் ஆக்கி
கணக்கின்றிக் காகிதத்தைக்
கட்டிச் சேர்த்து
பிணக்கழுகுப் பொறித்தேடிப்
பிணைத்தும் கொள்வார்
உலகமிதை அமுதமென
ஊன்றிப் பேசி
கலகநிறைக் காட்சியிதை
களியென் றாடி
பலமிதன்று படுத்துவிட
பயந்தே ஓடி
உலர்ந்து போய் உருக்குலைந்து
உதிர்ந்தே போவார்