+வட மாமாநில குகுகுளிர்+

வட மா..மா..நில கு..கு..கு..ளிர்
நாள் முழுதும் சூரியனுக்கு
நிச்சயமாய் அனுமதி இல்லை
பூமி பார்த்திட கண்களைத் தவிர
வேறு பாகங்களுக்கு அனுமதி இல்லை
வெள்ளை அடித்திடும் பனிக்கு மட்டும்
நாள் முழுவதும் அனுமதி
சூடான தேநீர் இக்காலத்தில் தேர்தலில் நின்றால்
நிச்சயமாய் ஜெயித்துவிடும்
சாலையோர நெருப்பு மூட்டல்
சகலரையும் குளிர் காய வைக்கும்
இருப்போருக்கு எல்லாம் கொடுத்து
குளிரிலிருந்து விடுதலை கொடுக்கும்
இல்லாதோர் படும் அவஸ்தை
குளிருக்கு கூட பொறுக்காது
அடுத்தடுத்த நாள் குளிர் கொஞ்சம்
அடக்கி வாசித்தால்
நன்றாக இருக்கும்...
அது நிச்சயமாக நடக்காது எனத்தெரிந்து
நடுங்கும் விரல்களில்
கணினியில் எழுத்துக்களை கவிதையாக மாற்றி
எழுத்துவில் பதித்தபடி நான்!