இவ்வளவேனும் காதல் செய் - பாகம் 1 - யாழ்மொழி

பனிமழை பொழிகின்ற
வாஷிங்டன் பகல்பொழுது
அதிகாலை குளிர்காற்று
அறைக்குள் மெல்ல நுழைந்து
"நித்திலனின்" நித்திரை கலைக்க

அயர்வின்றி எழுந்தவன் - இரு
கைகளை உரசி முகம் பார்க்க
விழிப்பதிர்வொலிக் கடிகாரம்
வீரத்தோடு பாடியது
"மனதில் உறுதி வேண்டும்"

மெத்தை விரிப்புகள் சரிசெய்து
மேனிகுளித்து தயாராகி
தேநீர் கலந்து பருகும்முன்னே
தாயின் எண்ணிற்கு அழைத்திட்டான்...

"தங்கம்" போன்ற தாயானவள்
பெயரும் குணமும் அதுவாகவே
செல்வத்தில் குறைவிலா திருமகள்
பண்பில் நிறைந்திட்ட குணமகள்

தகப்பன் இறக்கும்போது
"நித்திலன்" வயது மூன்று
இத்தனை காலங்கள் நன்று - இந்த
இலக்கிய நேசனை வளர்த்து
இன்று நாளை யென்று - அவன்
வரவை பார்த்திருக்கும் அன்புச்செண்டு ....

விடிந்ததும் அன்னைக்கு அழைப்பு
அப்போதே விடியும் அவளுக்கு
வருடங்கள் ஆறுகடந்தும் - இந்த
வழக்கம் மாறவில்லை...

அழைப்பு மணிக்காக காத்திருக்க
அன்பு மகனும் தொடர்புகொள்ள
ஆனந்த சம்பாசனைகள்
ஆயிரம் பரிமாறிக் கொண்டார்கள்

அன்னையின் அடுத்த கேள்வி
நித்திலன் திருமணம் பற்றி
பூரண பெருமையளித்த குணமகனே
பேரன் பேத்தி காண செய்தா லென்ன....?

எத்தனைதரம் சொல்வேன் தாயே - என்
எண்ணமெல்லாம் அவளொ ருத்திதானே
எங்கெங்கு பார்க்கிலும் அவள்முகமே
எந்த பெண்ணிலும் காணாத எழிலே - அவள்
எனக்குள்ளே நிறைந்திட்ட கவியே

அடபோடா என் ஆசைமகனே - உனை
அடக்கிவைத்திடும் ஒருத்தியினை
அழைத்துவருவேன் நானே - என்று
அதட்டலான அன்போடு சொல்லி
அழைப்பினை துண்டித்தார் தங்கம்....

அம்மாவின் கல்யாண பேச்சில்
அவனுள் அலையாக எழும்பியதவள்
நினைவு......

"சந்திரவதனா"
"சந்திரவதனா"
"சந்திரவதனா"

பிதற்றியபடி பின்வாசல் திறந்து
இறங்கி வந்தவன் இருகைகளை நீட்டி
பொழியும் பனி பிடித்து - அதில்
தெரிந்த அவள் எழில்கண்டு

கைகளை நெஞ்சில்பதித்து
கண்கள் மூடிக்கொண்டு
கெஞ்சினான்........ கொஞ்சினான்.........

"எனை ஆள்பவளே
எல்லாமு மானவளே
எங்கே இருக்கிறாயடி நீ......?

இதயசிம்மாசனத்தில்
இறுமாப்போடு அமர்ந்திருப்பவளை
கற்பனையில் கரம்பிடித்து
காதல் வசனம் பேசினான்.......

(தொடரும்)

எழுதியவர் : யாழ்மொழி (20-Dec-14, 2:36 pm)
பார்வை : 179

மேலே